நிதியமைச்சர் கொடுத்த அதிர்ச்சி... ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2,63,976 கடன் சுமை!

In Tamil Nadu, every family has a debt of Rs 2,63,976, said Finance Minister Palanivel Thiagarajan.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 கடன் உள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்டவை தொடர்பான 120 பக்க வெள்ளை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் நிதியமைச்சர்  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இந்த வெள்ளை அறிக்கையில் உள்ள ஒவ்வொரு துறை வாரியாகவும், வருவாய், இழப்பு குறித்து அமைச்சர் ஸ்லைடு ஷோ போட்டு காட்டி விளக்கம் அளித்து அவருகிறார்.

அப்போது, 2011-16ல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.17 ஆயிரம் கோடியாகவும், 2016-21ல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என கூறியுள்ளார். இந்தியாவில் வேறேந்த மாநிலமும் தமிழ்நாடு சந்தித்ததைப் போன்ற பொருளாதார சரிவை சந்திக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் தலையில் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளதாக நிதியமைச்சர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியாக அனைவருக்கும் அமைந்துள்ளது. மாநிலத்தின் கடனை செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.

மேலும், கடந்த 5 ஆண்டுகளில் வாங்கப்பட்ட 3 லட்சம் கோடி பொதுக்கடனில் 50% வருவாய் பற்றாக்குறைக்கான செலவினம் என்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடுகையில் பொதுக்கடன் 26.69 சதவீதமாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்று 2021 – 22ம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கணக்கீட்டின்படி மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ.5,70,189 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node