சென்னை : கடந்த செப்டம்பர் 9, 2026 அன்று திடீர் மூச்சுத் திணறல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாகச் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அவசரமாக அனுமதிக்கப்பட்டார். இந்தச் செய்தி தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், மருத்துவமனையின் இந்த புதிய அறிக்கை அனைவருக்கும் நிம்மதியைத் தந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ்.பாபு அவர்களுக்குச் சுவாசக் கோளாறுகளைச் சரிசெய்யத் தகுந்த முதலுதவிகள் வழங்கப்பட்டு, உடனடியாகப் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய ஒரு கூட்டு மருத்துவக் குழு (Multidisciplinary team of experts) அமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக இந்த மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையை 24 மணி நேரமும் மிகத் தீவிரமாகக் கண்காணித்து உரியச் சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, அவரது உடலில் உள்ள அனைத்து முக்கிய மருத்துவப் பாராமீட்டர்கள் (Clinical parameters) முற்றிலும் பாதுகாப்பான மற்றும் சீரான நிலையை எட்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவிய உடனே, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி பொதுமக்கள் எனப் பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டிப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். தற்பொழுது அவரது உடல்நிலை தேறி வருவதாகவும், அவர் தொடர்ந்து சிகிச்சைகளுக்கு மிகச் சிறப்பாக ஒத்துழைத்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு முழுமையான ஓய்வில் இருந்து சிகிச்சையை முடித்த பிறகு, அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் எனத் தெரிகிறது.
