காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்பு.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்.17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அக்டோபர் 1-ம் தேதி பரிசீலனை செய்யப்பட்டு அன்றைய தினமே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக காங்கிரஸ் தேர்தல் குழு அறிவித்துள்ளது. ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. எனவே, அக்.8-ஆம் தேதிக்குள் இருவரும் வாபஸ் பெறவில்லை என்றால், அக்.17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனால் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு பா.சிதம்பரம் அல்லது திக்விஜய் சிங் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node