காசா :கடந்த 23 மாதங்களாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடுமையான மோதல் நடந்து வரும் நிலையில், காசாவின் நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது. தற்பொழுது, இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா நகருக்குள் தரை வழியாக ஊடுருவி முன்னேறி வருவதால் பாலஸ்தீனியர்கள் காசா நகரை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மத்தியில், அமெரிக்கா மீண்டும் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அதாவது, காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா மீண்டும் தனது வீட்டோ அதிராகத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தோல்வி அடையச்செய்தது.
15 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலில் 14 உறுப்பினர்களின் ஆதரவில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, ஆனால் அமெரிக்காவின் வீட்டோ காரணமாக, அதை நிறைவேற்ற முடியவில்லை. இது காசாவில் மனிதாபிமான நெருக்கடியை மேலும் ஆழப்படுத்துவதாக உள்ளதாக ஐ.நா. மற்றும் பிற அமைப்புகள் எச்சரித்துள்ளன.
வீட்டோ அதிகாரம்
“வீட்டோ அதிகாரம்” என்பது ஒரு முடிவைத் தடுக்கும் அல்லது நிராகரிக்கும் அதிகாரத்தைக் குறிக்கிறது. இது பொதுவாக அரசியல், சட்டம் அல்லது நிர்வாக அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு (அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ்) வீட்டோ அதிகாரம் உள்ளது, இதன் மூலம் அவர்கள் எந்த முடிவையும் தடுக்க முடியும்.
