பெய்ஜிங் :வர்த்தகம் தொடர்பான பதட்டங்கள் மத்தியில் டிக்டாக்கின் எதிர்காலம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்றைய தினம் தொலைபேசி உரையாடலை நடத்தினர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் தானும் டிக்டாக் ஒப்பந்தத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், வர்த்தகம், சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் போர் குறித்து விவாதிக்க ஆறு வாரங்களில் தென் கொரியாவில் நேருக்கு நேர் சந்திப்பதாகவும் கூறியிருக்கிறார்.
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நான் ஒரு நல்ல உரையாடலை நடத்தினேன். அவர் டிக்டோக் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். ஒப்பந்தம் முடிவடையும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். நாங்கள் அதில் கையெழுத்திட வேண்டும், டிக்டோக் ஒப்பந்தம் விரைவில் நடக்க உள்ளது, முதலீட்டாளர்கள் தயாராகி வருகின்றனர்” என்றார்.
அக்டோபர் 31 ஆம் தேதி தென் கொரியாவின் கியோங்ஜுவில் தொடங்கும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் மேலும் பேச்சுவார்த்தை நடத்த இரு நாட்டு தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தான் சீனாவுக்குச் செல்வதாகவும், பின்னர் ஜி அமெரிக்கா வருவார் என்றும் டிரம்ப் கூறினார்.
