ரஷ்ய அதிபர் புதினுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு.!

இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக மோதல் ஏற்பட்டுள்ள சூழலில் ரஷ்யா உடனான உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

viladimir putin -Ajit Doval

கிரெம்ளின் :தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் கண்டித்து, இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை டிரம்ப் உயர்த்தி உள்ள நிலையில் இச்சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியா – ரஷ்யா இடையிலான ராஜதந்திர உறவு மற்றும் டிரம்ப்பின் வரிவிதிப்பு குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை மையமாகக் கொண்டு இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புக்கு பின்னர், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீண்டகால உறவு உள்ளதாகவும், இந்த உறவை மதிப்பதாகவும் தோவல் பேசினார். புடினின் இந்திய வருகை குறித்து உற்சாகம் தெரிவித்த அவர், வருகைக்கான தேதிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த சந்திப்பு, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை உறுதிப்படுத்துவதற்காகவும், சர்வதேச அரசியல் சூழலில் இந்தியாவின் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்காகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.