கிரீன்லாந்து போர் தொடங்கினால்… உலகில் அதிகம் சிரிப்பது புடின் தான்! ஸ்பெயின் எச்சரிக்கை!

கிரீன்லாந்து மீது அமெரிக்கா ராணுவப் பலத்தைப் பயன்படுத்தினால் அது நேட்டோவிற்கு (NATO) மரண ஓலமாக இருக்கும் என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.

pedro sanchez trump putin

ஸ்பெயின் :பிரதமர் பெட்ரோ சான்செஸ், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கிரீன்லாந்து குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு கடுமையான எதிர்வினை அளித்துள்ளார். ட்ரம்ப் கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விருப்பம் தெரிவித்த நிலையில், சான்செஸ் இதனை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு சாதகமான நிகழ்வாக சித்தரித்துள்ளார். இந்த அறிக்கை சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.

சான்செஸ் கூறுகையில், கிரீன்லாந்து மீது அமெரிக்கா படையெடுப்பது ரஷ்ய அதிபர் புடினை உலகின் மிக மகிழ்ச்சியான மனிதராக மாற்றும் என்று தெரிவித்துள்ளார். ஏனெனில், அமெரிக்காவின் இந்த செயல் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை சர்வதேச சமூகத்தில் நியாயப்படுத்தும் வகையில் அமையும் என்று அவர் வாதிட்டார். இது புடினுக்கு தார்மீக ரீதியான ஆதரவை அளிக்கும் என்றும், ரஷ்யாவின் அத்துமீறல்களை உலகம் ஏற்கும் சூழலை உருவாக்கும் என்றும் சான்செஸ் எச்சரித்துள்ளார்.

மேலும், கிரீன்லாந்து மீது அமெரிக்கா ராணுவப் பலத்தை பயன்படுத்தினால், அது நேட்டோ (NATO) கூட்டணிக்கு மரண ஓலமாக இருக்கும் என்று சான்செஸ் கூறியுள்ளார். நேட்டோவின் அடிப்படை கொள்கைகளான இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டங்களை அமெரிக்காவே மீறும் போது, கூட்டணியின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இது நேட்டோவின் உறுப்பினர்களிடையே பிளவை ஏற்படுத்தி, கூட்டணியின் வலிமையை சிதைக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.இந்த நிலையில், புடினுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படும் என்று சான்செஸ் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் அத்துமீறல் ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பை நியாயப்படுத்துவது மட்டுமின்றி, நேட்டோவின் வீழ்ச்சியையும் துரிதப்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

இது உலக அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை சான்செஸ் வெளிப்படுத்தியுள்ளார்.சான்செஸின் இந்த அறிக்கை ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. அமெரிக்காவின் கிரீன்லாந்து குறித்த பேச்சு சர்வதேச சட்டங்களை மீறியது என்று பல நாடுகள் கண்டித்துள்ள நிலையில், சான்செஸின் கருத்து ரஷ்யாவின் நிலைப்பாட்டுக்கு எதிராகவும், உலக அமைதிக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது. இது மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய அரசியலில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.