சென்னை :அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இன்று வானகரம் அருகே நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது, கூட்டணி விவகாரத்தில் அவருக்கே முழு அதிகாரம் வழங்குவது ஆகியவை முக்கியமானவை. “அதிமுக தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும்; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்று எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.
கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். “திமுக ஆட்சியில் உடல் உறுப்பைக் கூட விட்டுவைக்கவில்லை. கிட்னி முறைகேடு, போதைப்பொருள் விற்பனை, கள்ளச்சாராய கொலை, அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை, ஆம்ஸ்ட்ராங் கொலை என எந்த வழக்கிலும் சிபிஐ விசாரணைக்கு ஏன் பயம்? யாரையோ காப்பாற்ற துடிக்கிறார்கள்” என்று சாடினார். “திமுக கூட்டணி வைக்கும்போது பாஜக நல்ல கட்சி; அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா? நாங்கள் அடிமை இல்லை, திமுகதான் அடிமை” என்று ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார்.“திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தை மீட்டெடுத்தால் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம். பொங்கலுக்கு ரூ.5,000 தாராளமாக வழங்கலாம்; ஒரு ஆண்டு பட்ஜெட்டையே தாக்கல் செய்துவிடலாம்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
“மின்சாரக் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. வரி மேல் வரி போட்டு மக்களை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது திமுக அரசு” என்று விமர்சித்தார். “வேலைவாய்ப்பு, முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை கேட்டால் வெள்ளை பேப்பர் காட்டுகிறார்கள்” என்று கிண்டல் செய்தார்.எடப்பாடி பழனிசாமி மேலும், “சொந்த பலத்தை கொண்ட கட்சி அதிமுக; திமுக மக்கள் செல்வாக்கை இழந்த கட்சி. அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். அதிமுக ஆட்சி அமைப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது” என்று உறுதியளித்தார். “அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் சுயமாக சிந்தித்து செயல்படும் கட்சிகள்” என்று கூறி, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை நம்பிக்கை தரும் வகையில் பேசினார்.கூட்டத்தில் பொங்கல் பரிசாக ரூ.5,000 ரொக்கம் வழங்கக் கோரும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
“எவ்வளவோ ஊழல் செய்துவிட்டீர்கள்; கடைசி காலக்கட்டத்திலாவது மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ரூ.5,000 வழங்குங்கள்” என்று ஸ்டாலினிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணை கோரிக்கையும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வாழ்த்துகளையும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்தக் கூட்டம் 2026 தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைந்தது.
