சென்னை :கொளத்தூர் தொகுதியில் ரூ.25.72 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திறப்பு விழாவில் உரையாற்றிய அவர், “கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே புது எனர்ஜி, உற்சாகம், புத்துணர்ச்சி வந்துவிடும். யாராவது கொளத்தூர் என்று பெயர் சொன்னாலே சாதனை அல்லது ஸ்டாலின் என்று ஞாபகத்திற்கு வரக்கூடிய அளவுக்கு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
“கொளத்தூர் மட்டுமல்ல, எல்லா தொகுதிகளும் நமது தொகுதிகள்தான் என்பதை முன்னிறுத்தி பணியாற்றி வருகிறோம். 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு வந்தால்தான் எனக்கு முழு திருப்தி” என்று முதல்வர் உருக்கமாகப் பேசினார். கொளத்தூர் மக்களுடனான தனது பிணைப்பை வலியுறுத்திய அவர், “உங்கள் வீட்டுப் பிள்ளையாக, செல்லப் பிள்ளையாக, நல்ல பிள்ளையாக இருப்பேன்” என்று உறுதியளித்தார்.
கொளத்தூர் தொகுதியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து முதல்வர் விவரித்தார். “பெரியார் நகர் மருத்துவமனையை தரம் உயர்த்தி பல துறைகளுடன் கூடிய பெரிய மருத்துவமனையாக உருவாக்கியுள்ளோம். வண்ண மீன் உற்பத்தி மற்றும் வர்த்தக மையத்தையும் பல துறைகளுடன் கலந்து பேசி ஒழுங்குபடுத்தி உருவாக்கினோம்” என்று கூறினார். இந்தத் திட்டங்கள் தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
“ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் உள்ளார் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன” என்று கூறிய முதல்வர், திருமண மாளிகை போன்ற வசதிகள் பெண்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று குறிப்பிட்டார். அண்ணா திருமண மாளிகை, நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு, திருமணங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது.இந்தத் திறப்பு விழா கொளத்தூர் தொகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
