“ஒப்புதல் வழங்குவதில் ஆளுநர் அக்கறை காட்டவில்லை என பலமுறை குறிப்பிட்டுள்ளோம் ” – உச்ச நீதிமன்றம்.!

மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு வழக்கு ஆளுநர் அக்கறை காட்டவில்லை என்று பலமுறை கூறியும் கவனிக்கத் தவறியதாலேயே நீதிமன்றம் தலையிட்டது.

Supreme Court - Governor Assent Case

டெல்லி :மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு காலக்கெடு நிர்ணயித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 143-ஐப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கோரிய விவகாரம் தற்போது விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கு, தமிழ்நாடு அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தொடர்ந்த மனு தொடர்பாக எழுந்தது, குறிப்பாக ஆளுநர் மசோதாக்களை கிடப்பில் வைத்திருந்ததாகவும், பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. உச்ச நீதிமன்றம், ஆளுநர்கள் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களிலும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது.

இதற்கு எதிராக, குடியரசுத் தலைவர் கேள்விகளை முன்வைத்து, அரசியலமைப்பு காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில் உச்ச நீதிமன்றம் எவ்வாறு காலக்கெடு விதிக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் ஏற்கனவே கேள்விகளுக்கு பதில் இருப்பதாகவும், குடியரசுத் தலைவரின் குறிப்பை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் வாதிட்டது.

விசாரணையில் “மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஆளுநர் அக்கறை காட்டவில்லை என பலமுறை குறிப்பிட்டு கருத்துக்களையும் கூறியுள்ளோம். இவ்விவகாரத்தில் மோசமான சூழ்நிலை வந்த பின்னர்தான் அதை சரி செய்ய உச்ச நீதிமன்றம் தலையிட்டது.

மசோதாக்களுக்கு கால நிர்ணயம் செய்தது தொடர்பான வழக்கில், ‘அரசின் நிர்வாகத்தில் நீதித்துறை தலையிடுவதாக’ வாதிட்ட மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பதில் கூறியுள்ளது. மத்திய அரசு, காலக்கெடு நிர்ணயிப்பது அரசின் பணிகளில் தலையிடுவதாகவும், இது குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் வாதம் முன்வைத்தது. வழக்கு விசாரணை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய அரசு செப்டம்பர் 10ம் தேதி அன்று விரிவான பதிலை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளளது.