சென்னை :தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு பெருமிதம் தெரிவித்தார். ஆட்சிப் பொறுப்பேற்றபோது ஒருபுறம் மகிழ்ச்சியும் மறுபுறம் கவலையும் இருந்ததாகவும், பின்னடைவில் இருந்த தமிழகம், ஒத்துழைக்காத ஓரவஞ்சனை மத்திய பாஜக அரசு ஆகியவற்றால் கவலையில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
5 ஆண்டுகள் கடந்த இன்று மிக மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும், மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதுதான் இதற்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.ஆட்சிப் பொறுப்பேற்று 1,724 நாட்களில் 8,658 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதாகவும், 15,117 அரசு கோப்புகளில் கையெழுத்திட்டதாகவும், சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு 173 முறை சென்றதாகவும், 21 மாவட்டங்களில் மாபெரும் அரசு நலத்திட்ட விழாக்களில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கியதாகவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.
“என்னுடைய இலக்குகளை நான் வென்றுவிட்டேன். தமிழ்நாடு தலை நிமிர்ந்துள்ளது” என்று உணர்ச்சிபூர்வமாகக் கூறினார்.கடந்த 5 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்கள் மனங்களிலும் முகங்களிலும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் பார்க்கிறேன் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், வரப்போகும் ஒளிமயமான எதிர்காலத்தை உணர்த்துவதாக இந்த 5 ஆண்டுகள் அமைந்துள்ளன என்று தெரிவித்தார்.
அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியால் மாநிலம் சந்தித்த பின்னடைவு, ஓரவஞ்சனையுடன் செயல்படும் ஒன்றிய அரசு என்ற இடியாப்ப சிக்கல் போன்ற சூழலில்தான் 6-வது முறையாக ஆட்சிக்கு வந்ததாகவும் குறிப்பிட்டார்.“பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எதிர்கொள்ளாத நெருக்கடிகளை தற்போது எதிர்கொள்கிறோம். அவர்கள் காலத்தில் இருந்த ஆளுநர்கள் இப்படி இல்லை.
முரண்பாடுகள் இதயத்தில் இருந்தாலும் அதை ரணமாக்கும் வகையில் செயல்பட்டதில்லை. சோதனைகளை எதிர்கொண்டவனாக நான் நின்றுகொண்டிருக்கிறேன்” என்று முதலமைச்சர் கூறினார். “அளவுக்கு அதிகமான சோதனைகளை எதிர்கொண்டவன் நான் தான். எந்த சோதனைகளும் எனக்குப் புதிதல்ல. என்னைச் சீண்டிப்பார்ப்பவர்கள் மனசுக்குள் மகிழ்ச்சி அடையலாமே தவிர, அது என் மனதை எதுவும் செய்யாது!” என்று தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.,
மேலும் “யாரும் எங்களுக்கு தேசப்பக்தி பாடம் எடுக்க வேண்டாம் தேசப்பக்தி பாடம் எடுப்பவர்கள் தேசத்திற்காக போராடியிருக்கவில்லை தேச ஒருமைப்பாட்டில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டு, மக்களின் மகிழ்ச்சியே தனது மிகப்பெரிய சாதனை என்று பெருமிதம் தெரிவித்தார்.
