நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?
தவெக முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள், விவசாயிகளுக்கு நாளை (நவம்பர் 23) பனையூரில் விஜய் விருந்து அளிக்க உள்ளார்.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் தனது கட்சி கொள்கை மற்றும் அரசியல் நிலவரம் என பல்வேறு கருத்துக்களை கூறினார்.
இந்த மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் சுமார் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் விவசாய நிலங்களும் அடங்கும். அதனை மாநாட்டிற்கு பயன்படுத்திவிட்டு மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல ஏற்பாடு செய்து கொடுப்ப்பதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அண்மையில், நிலம் வழங்கிய அப்பகுதி விவசாயிக்கு பசுமாடு, கன்றுகுட்டியை தவெக நிர்வாகிகள் வழங்கி இருந்தனர்.
இந்நிலையில், தவெக முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய் , நாளை விருந்து அளிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
நாளை, வி.சாலை நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் 100க்கணக்கானோர் அவர்கள் குடும்பத்துடன் இந்த விருந்தில் கலந்து கொள்ள உள்ளனர் என்றும், இதற்கான பேருந்து ஏற்பாடுகளையும் தவெக கட்சியினர் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 10 மணியளவில் இந்த விருந்து நிகழ்வு நடைபெற உள்ளது.