திருச்சி:தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் மற்றும் நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் சந்திப்பு பயணத்தை திருச்சியில் தொடங்கினார். ‘உங்க விஜய் நா வரேன்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த சுற்றுப்பயணம், மாநிலம் முழுவதும் 13ஆம் தேதி முதல் டிசம்பர் வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் வந்தடைந்த விஜயை, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்த வரவேற்பு, விஜயின் அரசியல் பிரவேசத்தின் பெரும் ஆதரவை பிரதிபலிக்கிறது.
திருச்சி போல் முக்கியமான நகரத்தில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியது, த.வெ.க-வின் தேர்தல் உத்தியை வலுப்படுத்தும் எனக் கருதப்படுகிறது.பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் பயணித்த விஜய், மாரக்கடை சந்திப்பில் நடைபெறும் மக்கள் சந்திப்புக்கு விரைந்தார். வழிமுழுவதும் த.வெ.க தொண்டர்கள் அலைகடலெனத் திரண்டு, விஜயின் பிரச்சார வாகனத்தின் மீது மலர்கள் தூவி வரவேற்றனர்.
அதே சமயம் , தொண்டர்களின் ஆர்வம் அளவுக்கு மீறியது என்று கூறலாம். ஏனென்றால், மரங்கள், கம்பிகள், சுவர்கள் மீது ஏறி விஜயை காண முயன்றனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், காவலர்கள் தலையிட்டு தொண்டர்களை பாதுகாத்து இறக்கினர். அதே சமயம், போக்குவரத்து தடைகளையும் ஏற்படுத்தியது. போலீஸ் விதிமுறைகளின்படி, சந்திப்பு காலம் 30 நிமிடங்களுக்குப் பொறுத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி முதல் மதுரை வரை பல மாவட்டங்களைச் சுற்றி, மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் இந்தப் பயணம், கட்சியின் கொள்கைகளை பரப்பும். விஜய், ஆளும் திமுக மற்றும் மத்திய பாஜகவுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்கவுள்ளதாகத் தெரிகிறது. கூட்டம் அதிகமாக கூடியுள்ள காரணத்தால் திட்டமிட்டபடி பயணம் நடைபெறுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளது.
