டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான அஜிங்கியா ரஹானே (Ajinkya Rahane) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து வியாழக்கிழமை அன்று தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் சாந்தமான ஆட்டத்திற்கும் பெயர்பெற்ற ரஹானே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிகரமாக வெளியிட்ட வீடியோ மூலமாக இந்த முடிவை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கண்ணீருடன் உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்டார். இவரது இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் உலகையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரஹானேவின் சாதனைப் பயணம்
இந்திய அணிக்காக பல்வேறு வரலாற்று வெற்றிகளில் முக்கியப் பங்கு வகித்துள்ள ரஹானேவின் டெஸ்ட் கிரிக்கெட் பயணம் மிகவும் குறிப்பிடத்தக்கது. அவர் மொத்தம் 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,077 ரன்களைக் குவித்துள்ளார். இது தவிர, 90 ஒருநாள் போட்டிகளில் (ODIs) 2,962 ரன்களையும், 20 இருபது ஓவர் சர்வதேசப் போட்டிகளில் 375 ரன்களையும் சேர்த்துள்ளார்.
இவர் கேப்டனாகப் பொறுப்பேற்ற 6 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 4-ல் வெற்றியும், 2 போட்டிகளை டிராவும் செய்துள்ளது. மிக முக்கியமாக, அஜிங்கியா ரஹானே தனது கேப்டன்சியில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோல்வியைச் சந்திக்கவில்லை என்ற பெருமைக்குரிய சாதனையைப் படைத்துள்ளார். இவரது தலைமையில்தான், கடந்த 2020-21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது வரலாற்றுச் சிறப்புமிக்க பார்டர்-கவாஸ்கர் கோப்பையை (Border-Gavaskar Trophy) இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மாவின் நெகிழ்ச்சியான பதிவு
ரஹானேவின் ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து கிரிக்கெட் உலகிலிருந்து பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்த நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் ரோகித் சர்மா (Rohit Sharma) அவருடன் எடுத்துக் கொண்ட சிறப்புப் புகைப்படம் ஒன்றைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
ரஹானே குறித்து "நாம் பல ஆண்டுகளாக ஒரே டிரெஸ்ஸிங் ரூஃமைப் பகிர்ந்துள்ளோம். இன்று நீங்கள் சாதித்துள்ள அனைத்திற்கும் பின்னால் அசுரத்தனமான கடின உழைப்பு உள்ளது. உங்களது ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டின் மீது நீங்கள் கொண்ட காதல் ஆகியவை எப்போதுமே தனித்துவமானவை. உங்களது சிறப்பான கிரிக்கெட் வாழ்க்கைக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு என் இனிய நல்வாழ்த்துகள்." என ரோஹித் கூறியுள்ளார்.
