விஜய் தனித்துவமாக இயங்க வேண்டும்...அட்வைஸ் கொடுத்த திருமாவளவன்!

பாஜகவோடு விஜய் காட்டுகிற இணக்க அணுகுமுறைகூட விஜய்க்கு பயன்தராது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

tvk vijay thirumavalavan

சென்னை :விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். “விஜய் அரசியலுக்கு வந்ததை முதலில் வரவேற்றவன் நான். அவர் தனித்துவமாக இயங்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று கூறிய அவர், தற்போது நடக்கும் நிகழ்வுகளால் அந்த நம்பிக்கை சற்று குலைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து பேசிய திருமாவளவன், “செங்கோட்டையன் எந்தப் பின்னணியில் இணைந்தார் என எனக்குத் தெரியாது. ஆனால் தமிழக அரசியலில் நடக்கும் ஒவ்வொரு நகர்விலும் பா.ஜ.க.வின் கைகள் உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. அதிமுகவின் தற்போதைய குழப்பத்துக்கும் பா.ஜ.க. ஒரு காரணம் என்று அதிமுகவினர் உணர்வார்கள்” என்று குறிப்பிட்டார். பா.ஜ.க.வுடன் விஜய் காட்டும் இணக்க அணுகுமுறை அவருக்கு பயன்தராது என்றும் எச்சரித்தார்.

மேலும், “தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் உறவு வைத்துக்கொள்வதை மக்கள் எதிர்மறையாகவே பார்க்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத இந்த மனநிலை இங்கு மேலோங்கி இருக்கிறது. தவெக மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமானால், அது தனித்துவத்துடன் இயங்குகிறது என்ற நம்பிக்கையைப் பெற வேண்டும்” என்று திருமாவளவன் வலியுறுத்தினார். பா.ஜ.க.வுடன் இணக்கம் காட்டுவது போன்ற தோற்றம் உருவானால் அது தவெகவுக்கு சாதகமாக அமையாது என்றும் கூறினார்

மேலும், .ஈழத் தமிழர் பிரச்சினை குறித்தும் பேசிய திருமாவளவன், இலங்கையில் புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்படவிருப்பதால், இந்திய அரசு தலையிட்டு ஈழத் தமிழர்களுக்கு கூட்டாட்சி முறையையும் தன்னாட்சி அதிகாரத்தையும் பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழக மக்கள் பா.ஜ.க. உள்ளிட்ட சங் பரிவாரங்களின் அரசியல் நகர்வுகளுக்கு எதிராக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் கூறினார்.