விஜய் சாலைவலம்.., வழிநெடுக தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

நாகை மாவட்டம் புத்தூர் ரவுண்டானா பகுதிக்கு செல்லும் வழியில் விஜய்யின் பரப்புரை வாகனத்தை சூழந்து கொண்டு தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

Naagai -TVK Party

நாகை :செப்.13-ல் தேர்தல் பரப்புரையை தொடங்கிய விஜய், சனிக்கிழமைதோறும் மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், இன்றைய தினத்துக்கான பிரசாரத்தை மேற்கொள்ள, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அவர் நாகைக்கு புறப்பட்டார்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் புத்தூர் ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே இன்று நண்பகல் 1 மணியளவில் விஜய் உரையாற்றவுள்ளார்.

நாகப்பட்டினத்தில் பரப்புரை முடிந்த பிறகு, அவர் திருவாரூர் மாவட்டம் தெற்கு வீதியில் மாலை 3 மணியளவில் மற்றொரு பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கட்சியின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று த.வெ.க தலைமை அறிவுறுத்தியுள்ளது.

விஜய்யின் வருகையை எதிர்பார்த்து ஏராளமான பொதுமக்கள், தொண்டர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் குவிந்துள்ளனர். இதேபோல் அவரது முந்தைய திருச்சி பரப்புரையின்போது (செப்டம்பர் 13, 2025) ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நாகையிலும் இதேபோன்ற கூட்டம் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவெக தொண்டர்களுக்கு கட்சி தலைமையால் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டன. இருப்பினும், விஜய் பரப்புரை வாகனத்தில் நாகை நோக்கி சென்ற நிலையில், அங்கு காத்திருந்த தொண்டர்கள் வாகனத்திற்கு முன்பு சென்று வாகனத்தை மறித்து பூக்களை தூவி கூக்குரலிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.