500 கோடி பணம் தேவையில்லை என வந்தவர் விஜய்...செங்கோட்டையன் ஸ்பீச்!

என்னுடைய ரத்தத்தில் தவெக தலைவர் விஜயை முதலமைச்சராக்க வேண்டும் என எண்ணம் ஓடுகிறது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Featured image

சென்னை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற நிகழ்ச்சி இன்று ஈரோட்டில் நடைபெற்றது. இதில் செங்கோட்டையன் ஆற்றிய உரை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயை முதலமைச்சராக்க வேண்டும் என்று சபதம் செய்த அவர், “என் உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜயை கோட்டையில் அமர வைக்க உழைக்கிறது.

234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” என்று கூறினார். 1991-ல் ஜெயலலிதா வெற்றி பெற்றதை நினைவுகூர்ந்து பேசிய போது தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.செங்கோட்டையன் மேலும், “500 கோடி பணம் தேவையில்லை என்று மக்களுக்குச் சேவை செய்ய வந்தவர் விஜய். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு அடுத்து விஜயை முதலமைச்சராக்க வேண்டும்” என்று உறுதியளித்தார். தவெகவில் இணைந்த பிறகு தனக்கு வெளிச்சம் கிடைத்ததாகவும், 2026-ல் 234 தொகுதிகளையும் வென்று விஜயிடம் ஒப்படைப்போம் என்றும் கூறினார்.

அரசியலில் 50 ஆண்டுகள் அனுபவம் கொண்ட தான் ஒரு பொதுச்செயலாளரை உருவாக்கியவன் என்று குறிப்பிட்ட அவர், தன்னை தகுதியற்றவன் என்று நீக்கியதை வேதனையுடன் தெரிவித்தார்.தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பேசுகையில், செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார் என்று சுட்டிக்காட்டினார். “செங்கோட்டையன் சொல்வதை விஜய் உள்ளிட்ட அனைவரும் கேட்பார்கள். அவர் போடும் ரூட்டில்தான் இனி விஜய் பயணிப்பார்” என்று வலியுறுத்தினார். 2026-ல் விஜயை முதலமைச்சராக்கி சிறந்த தமிழகத்தை உருவாக்குவோம் என்று சபதம் செய்தார்.ஆனந்த் மேலும், “எதிர்க்கட்சிகள் தவெகவை எதிர்க்கின்றன. ஆனால் அவர்களது.

குடும்பத்தினர் தவெகவுக்கு வாக்களிப்பார்கள். ஏனெனில் உண்மையான தலைவர் கிடைத்துள்ளார்” என்று கூறினார். விஜய் பரப்புரைக்கு அனுமதி பெற செங்கோட்டையன் போராடியதை பாராட்டிய அவர், பணம் தராமல் கூட்டம் சேர்வதை கண்டு எல்லா கட்சிகளுக்கும் பயம் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

ஈரோட்டில் 8 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும் என்று உறுதியளித்தார்.இந்த நிகழ்ச்சி தவெகவின் வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. செங்கோட்டையன் போன்ற மூத்த அரசியல்வாதிகள் இணைவது கட்சிக்கு பலம் சேர்க்கும். 2026 தேர்தலுக்கு முன்னதாக இத்தகைய உரைகள் தவெகவின் உற்சாகத்தை அதிகரித்துள்ளன. விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் புதிய வரலாறு படைக்கும் என்று தொண்டர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.