சங்கர் ஜிவால் ஓய்வு.., பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்.!

தமிழ்நாடு டிஜிபி (DGP) சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெற்றார். அவரது ஓய்வைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அவருக்கு புதிய பொறுப்பாக தமிழ்நாடு தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக நியமித்துள்ளது.

DGP - Venkat Raman

சென்னை :தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக (Director General of Police) ஜி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். டிஜிபி சங்கர் ஜிவால் இன்றுடன் (ஆகஸ்ட் 31) ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, வெங்கட்ராமன் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

வெங்கட்ராமன் தற்போது நிர்வாகப் பிரிவு டிஜிபியாக (DGP of the Administrative Division) பணியாற்றி வருகிறார். புதிய டிஜிபி நியமனத்திற்கான மத்திய அரசின் மூவர் பட்டியல் இன்னும் இறுதியாகவில்லை என்பதால், தற்காலிகமாக வெங்கட்ராமன் இப்பொறுப்பை ஏற்றுள்ளார்.

புதிய டிஜிபி நியமனத்திற்கான இறுதி முடிவு, யுபிஎஸ்சி (UPSC) வழிகாட்டுதல்களின்படி, மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலிலிருந்து மாநில அரசால் தேர்ந்தெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதில் சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் ஜி. வெங்கட்ராமன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

யார் இந்த ஜி.வெங்கடராமன்?

1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான வெங்கட்ராமன், நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். இவர் இளங்கலை பொருளாதாரமும், முதுகலை பொது நிர்வாகமும் பயின்றவர். 1996-ல் திருச்செந்தூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக (ASP) பணியைத் தொடங்கினார்.

பின்னர், 2001-ல் சிபிஐ சென்னையில் எஸ்பியாகவும், 2008-ல் டிஐஜியாகவும், 2009-ல் சிபிசிஐடி டிஐஜியாகவும், 2012-ல் ஐஜியாகவும், 2019-ல் கூடுதல் டிஜிபியாகவும் (ADGP) பதவி உயர்வு பெற்றார். 2024-ல் சட்டம் ஒழுங்கு கூடுதல் பொறுப்பு டிஜிபியாகப் பணியாற்றி வந்தார். தற்போது, தமிழக அரசு அவரை பொறுப்பு டிஜிபியாக நியமித்துள்ளது, மேலும் இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினை அவர் சந்தித்து பேசியுள்ளார்.