சென்னை :2026-ஆம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 20) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் தொடங்கியது. காலை 9.20 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவைக்கு வந்தடைந்தார். சபாநாயகர் எம்.அப்பாவு அவரை பூங்கொத்து மற்றும் புத்தகம் கொடுத்து வரவேற்றார். பாரம்பரியமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனால் சட்டப்பேரவை மரபின்படி தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்படும் என்று சபாநாயகர் தெளிவுபடுத்தினார். தேசிய கீதம் இசைக்கப்படாததால் ஆளுநர் உரையை வாசிக்காமலேயே காலை 9.37 மணியளவில் பேரவையிலிருந்து வெளியேறினார்.ஆளுநரின் இந்த வெளிநடப்பு சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். “ஆளுநர் உரையை புறக்கணித்தது வருத்தம் அளிக்கிறது. ஆளுநரின் செயல் அரசியலமைப்பை அவமதிக்கும் நடவடிக்கை. ஆளுநர் ரவி தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். ஆளுநரின் செயலை சட்டமன்றம் ஏற்கவில்லை” என்று அவர் தெரிவித்தார்.மேலும், “ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை” என்று பேரறிஞர் அண்ணா கூறியபோதிலும், முத்தமிழறிஞர் கலைஞர் அதை வழிமொழிந்தபோதிலும், அந்த பதவிக்கு உரிய மரியாதையை அவர்கள் கொடுத்ததை நான் பின்பற்றி வருகிறேன்.
ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். ஆளுநரின் உரை படிக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது” என்று முதலமைச்சர் கூறினார்.ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதால், சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார் என்றும், தமிழ்நாடு அரசு அச்சிட்டு வழங்கிய உரை மட்டும் பேரவை குறிப்பில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வு ஆளுநர் – தமிழ்நாடு அரசு இடையேயான முரண்பாட்டை மீண்டும் வெளிப்படையாகக் காட்டியுள்ளது.
