ஜனநாயகன் பிரச்சனைக்கு உதயநிதியும் எல்.முருகனும் தான் காரணம் - ஆதவ் அர்ஜுனா !

எல்.முருகனும், உதயநிதியும் சேர்ந்துகொண்டுதான் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் பண்ண விடவில்லை என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” படம் இணையத்தில் கசிந்து பரவியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.படம் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே, அதன் முக்கியமான காட்சிகள் மற்றும் லிங்க் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. இந்தக் கசிவு திட்டமிட்ட செயல் என்று தவெக தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து தவெக முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜூனா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,“இந்தப் படம் திடீரென இணையத்தில் வெளியாகியிருப்பது, தியேட்டரில் வெளியிட முடியாத நிலையை உருவாக்கும் ஒரு திட்டமிட்ட செயல். இது வெறும் படக் கசிவு அல்ல, எங்கள் தலைவர் விஜய்யை மிரட்டும் செயல். இது ஒரு மிரட்டல் செய்தியாகவே நாங்கள் பார்க்கிறோம்.படத்தை ரிலீஸ் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, இரண்டரை மணி நேரத்துக்குள் ஒன்றிய அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதற்குப் பின்னணியில் ஒன்றிய அமைச்சர் முருகன் இருந்தார். அவர் படத்தை நிறுத்தி அதிமுகவுக்கு உதவ வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினும், ஒன்றிய அமைச்சர் முருகனுடன் இணைந்து செயல்பட்டுள்ளனர்.இது BJP-திமுக கூட்டணியின் செயல். இரு கட்சிகளும் சேர்ந்து புதிதாக வரும் ஒரு தலைவருக்கு எதிராக அழுத்தம் கொடுத்துள்ளன.

ஆனால் எங்கள் தலைவர் எந்த அழுத்தத்துக்கும் அடிபணிய மாட்டார். அவர் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, ஒரு நல்ல ஆட்சியை அமைக்க வந்திருக்கிறார்.” எனவும் தெரிவித்துள்ளார். இந்தக் கசிவு சம்பவம் தற்போது தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. படக்குழு ஏற்கனவே இந்தச் சம்பவத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.“ஜனநாயகன்” படம் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்துள்ளது, தேர்தல் நெருங்கும் நிலையில் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.