2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திட்டமிட்டிருந்த வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தை ஒத்திவைத்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெறாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.தவெக சார்பில் வரும் 29ஆம் தேதி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்திற்கு அனுமதி கோரியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்பு திட்டமிட்டிருந்த கூட்டத்தை நடத்த அனுமதி கிடைக்காத நிலையில், தவெக தரப்பு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் இது தொடர்பாக தெளிவான விளக்கம் அளித்தார். “காவல்துறை அனுமதி இல்லாத இடத்தில் எந்தக் கூட்டத்தையும் நடத்த முடியாது. அரசியல் கூட்டங்களுக்கு Suvidha இணையதளம் மூலம் 48 மணி நேரத்துக்கு முன்பாகவே ஆன்லைன் விண்ணப்பம் செய்ய வேண்டும். நேரில் மனு கொடுத்தாலும், ஆன்லைன் விண்ணப்பம்தான் அனுமதிக்கு அடிப்படையாக இருக்கும்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “நாளை கூட்டம் நடத்தப் போகிறோம் என்று ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்தால் மட்டும் அனுமதி வழங்க முடியாது. அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் உடனடியாக அனுமதி வழங்கப்படும். முறையான நடைமுறைகளைப் பின்பற்றி, 48 மணி நேரத்துக்கு முன்பு Suvidha போர்ட்டலில் விண்ணப்பிக்க வேண்டும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தவெகவின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக “அனுமதி மறுக்கப்பட்டதா?” என்ற கேள்விக்கு, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன், “அனுமதி மறுக்கப்படவில்லை. முறையான ஆன்லைன் விண்ணப்பம் இல்லாததால் கூட்டத்தை நடத்த முடியவில்லை. சரியான நடைமுறையைப் பின்பற்றினால் அனுமதி கிடைக்கும்” என்றும் தெளிவுபடுத்தினார்.
