தவெக மாநாடு : உயிரிழப்புகள் 7ஆக உயர்வு.! 

தவெக மாநாட்டில் கலந்து கொள்ள வரும்போது விபத்தில் சிக்கியவர்கள், மாநாட்டில் உயிரிழந்தோர், மாநாடு முடிந்து திரும்புகையில் விபத்தில் சிக்கியவர்கள் என 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

TVK Leader Vijay

சென்னை :கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் வெயிலின் தாக்கம், விபத்துகள் என சில உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்து தவெகவினரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை பாரிஸ் கார்னர் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் மாநாட்டிற்கு புறப்படுகையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அடுத்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் சிக்கி திருச்சி தவெக நிர்வாகிகள் சீனிவாசன் , விஜய்கலை என இருவர் உயிரிழந்தனர்.

மாநாட்டில் மயக்கடமடைந்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த சார்லஸ் என்பவர் உயிரிழந்தார். செஞ்சியை சேர்ந்த வசந்தகுமார் என்பவரும் விபத்தில் உயிரிழந்திருந்தார். இவர்கள் 6 பேரின் உயிரிழப்பு குறித்தும் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருத்தம் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து தவெக மாநாடு முடிந்து சேலம் திரும்புகையில் விபத்தில் சிக்கி லட்சுமி என்பவர் சேலம் அரசு மருத்துவமமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தவெக மாநாட்டில் நேர்ந்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.