சென்னை : தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தேச தரவுகளின்படி சுமார் 85% வாக்குகள் பதிவாகியுள்ளன.இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது“வழக்கமான வாக்குப்பதிவுதான் இது. இதைப் பார்த்து வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை. எஸ்.ஐ.ஆர் (Special Intensive Revision) மூலமாக ஏராளமான வாக்குகள், லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
அந்த வாக்குகள் நீக்கப்படாமல் இந்த வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தால், பழைய மாதிரியே வாக்குப்பதிவு நடந்திருக்கும் என்றுதான் நாம் பேசியிருப்போம். ஆனால் எஸ்.ஐ.ஆர் மூலம் இதுவரை பதிவு செய்யப்படாமல், வெறும் எண்ணிக்கையில் மட்டுமே இருந்த லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்பட்டிருப்பதால், இப்போது கூடுதலாக வாக்குப்பதிவு ஆகியிருப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது.
இது உண்மை இல்லை.ஒவ்வொரு தேர்தலுக்கும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வாக்காளர்கள் 20 லட்சம் முதல் 25 லட்சம் பேர் வரை இணைவார்கள். இந்தத் தேர்தலிலும் அந்த அளவில் புதிய வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர். அவ்வளவுதான்.இந்தத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும். களத்தில் நேரடியாக மக்களைச் சந்தித்த அனுபவத்திலிருந்து இதை நாங்கள் உணர்கிறோம்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.
