மதுரை : தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பெரும்பான்மை ஆதரவை வலியுறுத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பேபி, “டெல்லியின் தலையீட்டால் தமிழ்நாட்டில் மக்கள் தீர்ப்புக்கு எதிராகச் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவை பின்வாசல் வழியாக ஆட்சிக்கட்டிலில் ஏற்றும் முயற்சி நடைபெறுகிறது” என்று குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் கூறியதாவது:“விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். பெரும்பான்மை காட்ட வேண்டும் என்று ஆளுநர் கேட்பது அவரது வேலை அல்ல. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது. துரதிர்ஷ்டவசமானது.” என தெரிவித்தார்.
மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கழகம் (விசிக) இன்னும் தனது முடிவை அறிவிக்காதது குறித்து வியப்பு தெரிவித்த பேபி, “விசிக இன்று காலை 11 மணிக்கு முடிவை அறிவிப்பதாக சொல்லியிருந்தது. ஆனால் ஏன் இன்னும் தாமதம் செய்கிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை. இது வியப்பாக இருக்கிறது” என்றார்.
தமிழகத்தில் தற்போது நடைபெறும் அரசியல் விளையாட்டுகள் டெல்லியின் ஆதரவுடன் நடைபெறுவதாகவும், அதிமுகவை ஆட்சியில் அமர்த்தும் முயற்சி நடைபெறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ளன. இப்போது விசிகவின் முடிவும் எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக அரசியல் களம் முழுமையான எதிர்பார்ப்பில் உள்ளது.
