சென்னை : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 25ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 26ஆம் தேதி தமிழகத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை தொடரும். வட கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 27ஆம் தேதி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடரும். டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 28ஆம் தேதியும் மழை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
வானிலை மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின் படி, மழை பெய்யும் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
