கன்னியாகுமரி :கன்னியாகுமரி மாவட்டத்தில் விவேகானந்தர் பாறை நினைவகத்தையும், 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் 77 மீட்டர் நீளமுள்ள கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி பாலம் மிகவும் உறுதியாக உள்ளது. மேலே பராமரிப்பு பணியின் போது 7 அடி உயரத்தில் இருந்து விழுந்த சுத்தியதால், நான்கடுக்கு கண்ணாடியின் முதல் அடுக்கில் மெல்லிய கீறல் ஏற்பட்டது. புதிய கண்ணாடி பொருத்தும் பணிகள் 2 நாட்களுக்குள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைத்து கண்ணாடி இழை தரைதள பாலம் கட்டப்பட்டு, சுமார் 17.50 இலட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு களித்துள்ளார்கள். இக்கண்ணாடி பாலத்தினை தகுதியான வல்லுநர்களை கொண்டு, சிறப்பாக பாரமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 16ம் தேதி அன்று பாலத்தை கட்டிய ஒப்பந்தாரர் மூலம் பாலத்தின் மேல்பகுதியில் பெயிண்ட் அடிக்கும் பணிகள் மேற்கொள்ளும் போது எதிர்பாரத விதமாக பணியாளர் கையில் இருந்த ஒரு சிறிய சுத்தியல் 7 மீட்டர் உயரத்திலிருந்து 6வது கண்ணாடியின் மேல் விழுந்து முதல் அடுக்கில் மெல்லிய கீறல் ஏற்பட்டது.
இதன் பிறகு கண்ணாடி தயாரிக்கும் நிறுவனமான சென்னை SAINT COBIANE -இல் கண்ணாடி புதிதாக செய்வதற்கு ஒப்பந்ததாரர் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இக்கண்ணாடி மொத்தம் 4 அடுக்குகளாக உள்ளதால், உரிய பாதுகாப்பு நடைமுறையில் முறையில் தயாரிக்கப்பட்டு, கடந்த 1ம் தேதி அன்று கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தது.
அதனைத்தொடர்ந்து SAINT COBIANE நிறுவனத்தின் முன்னிலையில் 4ம் தேதி அன்று கண்ணாடி சோதிக்கப்பட்டது. இக்கண்ணாடியை பாலத்தில் பொருத்துவதற்கு 3 Phase மின் இணைப்பை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் மின்இணைப்பு பெறுவதில் சிக்கல் இருந்ததால், தற்போது ஜெனரெட்டர் மூலம், கண்ணாடி பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணியானது இரு தினங்களில் நிறைவுபெறும்.
மேலும் 16ம் தேதி முதல் இன்று வரை ஒரு இலட்சத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தின் மீது நடந்து சென்றுள்ளனர். இதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. கண்ணாடி பாலம் மிகவும் உறுதித்தன்மையுடனும் இருக்கின்றது. எனவே சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தினை தொடர்ந்து பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
