அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்! முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
ஆளுநரின் செயல்பாடுகள் அரசுக்கு சிறப்புதான் சேர்க்கிறது என கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது கொளத்தூர் தொகுதியில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து சில விஷயங்களை பற்றி பேசினார். இது குறித்து பேசிய அவர் ” வடசென்னை வளர்ந்த சென்னையாக இருக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மேயர் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார். அவரைப்போல அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டுக்குள் திட்டங்கள் அனைத்தையும் முடிக்கவேண்டும் என உத்தரவுப்போட்டிருக்கிறேன்.
வடச்சென்னை ஒராண்டுக்குள் வளர்ந்த சென்னையாக மாறும்.சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால்தான் வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் வருகின்றன” எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் ஆளுநர் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ” ஆளுநர் ரவி எல்லா பிரச்னைகளிலும் அரசுக்கு எதிராக செயல்படுகிறார். ஆளுநரின் செயல்பாடுகள் அரசுக்கு சிறப்புதான் சேர்க்கிறது.
அவர் அப்படியே செயல்படட்டும். அது ஒரு வகையில் எங்களுக்கு நல்லது என்றுதான் நினைக்கிறேன். அவர் அதை செய்ய செய்யதான், எங்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் ‘வேகம்’ வருகிறது. அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது” எனவும் பேசினார். அதன்பிறகு பெரியார் பற்றிய விவகாரம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின் ” பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு மரியாதை கொடுக்க நாங்கள் விரும்புவது இல்லை” எனவும் பேசிவிட்டு மு.க.ஸ்டாலின் சென்றார்.