அதிமுகவுக்கும் – திமுகவும் இடையே தான் போட்டி -இபிஎஸ் அதிரடி!

எம்ஜிஆர் தமிழகத்தில் தொடர் சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளைப் பெற்று அதிமுகவுக்கு பெருமை சேர்த்த மகத்தான தலைவர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Featured image

சென்னை :தமிழகத்தில் அதிமுக நிறுவனத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 109-வது பிறந்தநாள் இன்று (ஜனவரி 17) உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் திரைப்படங்கள் மூலம் புரட்சிகர சிந்தனைகளையும் சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் மக்களிடம் கொண்டு சென்றவர். அவரது பாடல்கள் மற்றும் வசனங்கள் இன்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கின்றன. திரைப்படங்களின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதில் எம்ஜிஆருக்கு நிகரானவர் உலகில் வேறு எங்கும் இல்லை என்று பலரும் பாராட்டுகின்றனர்.

எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சித் தொண்டர்களுக்கு சிறப்புக் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் மனங்களில் இருந்து நீங்காமல் நிலைத்த புகழோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் எம்ஜிஆர்” என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். தீய சக்தியின் ஆட்சியில் இருள் சூழ்ந்திருந்த தமிழகத்தை மீட்டெடுத்து ஒளியேற்றியவர், குடும்ப ஆட்சிக்கும் கொடுங்கோல் ஆட்சிக்கும் முடிவு கட்டி, மக்கள் ஆட்சியை உருவாக்கியவர் என்று புகழ்ந்துள்ளார்.

எம்ஜிஆர் தமிழகத்தில் தொடர் சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளைப் பெற்று அதிமுகவுக்கு பெருமை சேர்த்த மகத்தான தலைவர் என்றும், தற்போது நடைபெறும் மக்கள் விரோத ஆட்சியையும் குடும்ப ஆட்சியையும் விரட்டி அதிமுகவை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்த்த தமிழக வாக்காளர்கள் காத்திருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எம்ஜிஆரின் கொள்கைகளைத் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.தேர்தல் களம் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையில்தான் போட்டி உள்ளது.

மூன்றாவது கட்சியை ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன. அவர்கள் இன்னும் களம் காணவே இல்லை. களம் கண்டால்தான் அவர்களின் வாக்கு சதவீதம் தெரியும்” என்று கூறினார். தற்போதைய நான்கு முனைப் போட்டி விரைவில் இருமுனைப் போட்டியாக மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.எம்ஜிஆரின் பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கட்சி அலுவலகங்கள், எம்ஜிஆர் சிலைகள், பொது இடங்களில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். எம்ஜிஆரின் கொள்கைகள் மற்றும் சமூக நீதி புரட்சி இன்றும் தமிழக மக்களின் மனதில் நிலைத்திருப்பதை இந்த நிகழ்வுகள் மீண்டும் நினைவூட்டுகின்றன.