திமுகவுக்கும், அதிமுக- பாஜகவுக்கும் இடையேதான் போட்டியே – தமிழிசை செளந்தரராஜன் ஸ்பீச்!

அதிமுக தலைவர்கள் அடிக்கடி பாஜக தலைவர்களை சந்திப்பதால் நட்புதான் விரிவடையும் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

tamilisai soundararajan

கோவை :விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம் குறித்து விரிவாகப் பேசினார். கோவை, திருப்பூர் போன்ற நகரங்களின் அடையாளம் அனைவருக்கும் தெரியும் என்று கூறிய அவர், சிலர் புதிதாக வந்து “மஞ்சள் நகரம்” என்று கூறுவதை விமர்சித்தார். அது பாஜக அரசால் அமைக்கப்பட்டது என்று தெரிவித்த அவர், பாஜக – அதிமுக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது என்றும், தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல் நெரிக்கப்பட்டு வருகிறது என்றும் குற்றம்சாட்டினார்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தீபம் ஏற்ற போராட்டத்தில் பூரண சந்திரன் தனது உடலில் தீ வைத்துக்கொண்டு உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய தமிழிசை, இதற்கு தமிழக முதல்வர் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார். துப்புரவு தொழிலாளர்களை கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இந்த விவகாரம் மதப் பிரச்சனை அல்ல, அது ஈகோ பிரச்சனை என்றும் கூறினார். நீதிபதியையே குற்றம் சாட்டுவது தவறான போக்கு என்றும், திருப்பரங்குன்றம் தூண் குறித்து பல்வேறு கருத்துக்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

முருகன் இரண்டு வாழ்க்கை வாழ்ந்ததாக சிலர் பேசுவதையும், அரசியல் தலைவர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்வது குறித்து பெண்ணாக தான் பேச முடியாது என்றும் குறிப்பிட்டார். விஜய் 10 வயதிலிருந்து மக்களுடன் இணைப்பு இருப்பதாகக் கூறினால், 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சேவை செய்துள்ள எங்களுக்கு எந்த அளவுக்கு இணைப்பு இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று தமிழிசை கூறினார். திமுக மகாத்மா காந்தியை உரிய முறையில் கொண்டாடவில்லை என்றும், அறிவாலயத்தில் தேசியக் கொடி கூட ஏற்றவில்லை என்றும் விமர்சித்தார்.

மகாத்மா காந்தி ஊழல் அற்றவர் என்றும், ஆனால் மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஊழல் நடந்த மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று என்றும் குற்றம்சாட்டினார். காந்திக்கும் காங்கிரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.முற்போக்கு இயக்கங்கள் என்ற பெயரை மாற்றி, அவை பிற்போக்கு இயக்கங்கள் என சொல்ல வேண்டும் என்று தமிழிசை கூறினார். சரஸ்வதி நாகரிகம் வரலாற்றில் உள்ளது என்றும், அதிமுக அமைச்சர்கள் பாஜக தலைவர்களை சந்திப்பது நட்பின் அடையாளமே, வேறு பிரச்சனை இல்லை என்றும் தெரிவித்தார்.

அமலாக்கத்துறை சோதனைகளில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்றும், தேர்தல் நேரம் என்பதால் வழக்குகள் போடப்படவில்லை என்றாலும், அவை எப்போதும் தொடரும் என்றும் கூறினார்.உதயநிதிக்கு புரிகிறதா இல்லையா என்பது தெரியவில்லை என்றும், எழுதித் தருபவர்கள் எதுகை, மோனையுடன் எழுதித் தருகிறார்கள் என்றும் விமர்சித்தார். கருணாநிதி பெயரை அனைத்துக்கும் வைத்துள்ளனர் என்றும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை வைக்கலாம் என்றும் கூறினார். “தீய சக்தி திமுக” என்பது சரித்திரத்தில் எழுதப்பட்ட வார்த்தை என்றும், நான் அனைத்து மதங்களுக்கும் ஆதரவாக பேசுவேன் என்றும், ஆனால் பைபிளை பாராட்டி பகவத் கீதையை எதிர்ப்பது தவறு என்றும் தமிழிசை தெரிவித்தார்.