திருவாரூர் :தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், செப்டம்பர் 20, 2025 அன்று நாகப்பட்டினத்தில் தனது பிரச்சாரத்தை முடித்துவிட்டு, திருவாரூருக்கு பயணித்தார். திருவாரூரில், விவசாயிகளைக் குறிக்கும் பச்சைத் துண்டு அணிந்து, தொண்டர்களை உற்சாகமாக சந்தித்தார். தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்ற நிலையில், விஜய்யின் பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவாரூர் பிரச்சாரத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த விஜய், “ஓடாத ஆழித் தேரை ஓடவைத்தவரின் மகன், தமிழ்நாட்டை ஓடாமல் ஆக்கிவிட்டார். திருவாரூர் தனது சொந்த மாவட்டம் என்று சொல்லிக்கொள்பவர், இந்த மாவட்டத்தையே கருவாடாக காயவிட்டிருக்கிறார்,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடினார்.
இது குறித்து பேசிய அவர் ” ரொம்ப நாளாக ஓடாமல் இருந்த இந்த திருவாரூர் தேரை, ஓட்டினது நான்தான்னு மாரைத் தட்டிச் சொன்னது யாரென்று உங்களுக்கு தெரியும். ஆனால் அவருடைய மகன் மாண்புமிகு CM.. இப்போ என்ன செய்றாங்க நல்லா ஓடவேண்டிய தமிழ்நாடு என்ற தேரை நாலாப்பக்கமும் கட்டையபோட்டு ஆடாமல் அசையாமல் அப்படியே நிப்பாட்டிட்டார். இதை பெருமையாகவும், சவாலாகவும் சொல்லிக் கொள்கிறார்” எனவும் விமர்சனம் செய்தார்.
தமிழக அரசின் ஆட்சியில் திருவாரூரில் முன்னேற்றம் இல்லை என்று குற்றம்சாட்டிய அவர், மக்களின் பிரச்சினைகளுக்கு தவெக தீர்வு காணும் என்று உறுதியளித்தார்.விஜய், தவெகவின் தேர்தல் உத்தியை விளக்கி, “பொய்யான தேர்தல் அறிக்கைகளை தரமாட்டோம். நடைமுறை சாத்தியமானவற்றை மட்டுமே வாக்குறுதியாக தருவோம்,” என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் “எங்கு சென்றாலும், இது சும்மா கூடும் கூட்டமா? ஓட்டு போட மாட்டார்கள் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?” என்று தொண்டர்களை நோக்கி கேள்வி எழுப்பிய விஜய், உடனடியாக “இல்லை இல்லை” என்ற கரகோஷத்துடன் பெரும் வரவேற்பை பெற்றார். இந்த கூட்டம், தவெகவின் மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியது.
