விழுப்புரத்தில் நடைபெற்ற ‘மிஸ் திருநங்கை’ அழகிப் போட்டியில், முன்னாள் அமைச்சர் க. பொன்முடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.அவர் பேசுகையில்,“இவர்கள் எல்லாம் முதலில் எப்படி அழைக்கப்பட்டார்கள் என்று நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் கலைஞர் வந்த பிறகுதான் அவர்களை ‘மூன்றாம் பாலினத்தவர்’ என்றெல்லாம் அழைக்கக் கூடாது என்று சொல்லி, திருநங்கைகள் என்ற அழகான பெயரைச் சூட்டினார். நல்லா நினைச்சுப் பாருங்கள்.
அதுதானே திராவிட மாடல் ஆட்சி. எல்லோரும் சமம். We are all human beings. இருக்கிற எல்லோரும் படித்தவர்கள், பண்பாளர்கள், எல்லாம் மனிதர்கள்தான். இதில் ஏற்றத்தாழ்வுகள், வேற்றுமைகள் இருக்கக் கூடாது என்ற உணர்வோடுதான் திருநங்கைகள் என்று அழைத்தார்.
அந்தத் திருநங்கைகளுக்காக ஒரு நலவாரியத்தையும் அமைத்துக் கொடுத்தவர் தலைவர் கலைஞர். 2008ஆம் ஆண்டிலேயே திருநங்கை நலவாரியத்தை அமைத்துக் கொடுத்தார். அப்பொழுது நானும் அமைச்சரவையில் இருந்தேன். அந்த உணர்வோடு இன்று இங்கே திருநங்கைகள் எல்லாம் வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், உண்மையிலேயே இது ஒரு பாராட்டத்தக்க நிகழ்ச்சியாகத்தான் நான் கருதுகிறேன்.முன்பெல்லாம் திருநங்கைகள்ன்னா எப்படி கஷ்டப்பட்டாங்க? படிக்க விட்டாங்களா? படிப்பதற்குக் கூட அவர்களுக்கு அனுமதி இல்லை. அப்படி இருந்தவர்கள்தான் இந்தத் திருநங்கைகள்.
பெரும்பாலும் வழியில் நின்று கையெஞ்சிக் கொண்டிருப்பார்கள்.ஆனால் இன்று அப்படி இல்லை. இன்று இங்கே இருக்கிற பலரை அறிமுகப்படுத்தும்போது நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு சகோதரி ‘நான் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன்’ என்றார். மற்றொருவர் ‘நான் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறேன்’ என்றார். வேறு ஒருவர் ‘நான் PhD செய்து கொண்டிருக்கிறேன்’ என்றார்.
ஒரு காலத்தில் இவர்களுக்குப் படிப்பதற்குக் கூட வாய்ப்பு இல்லாத சூழ்நிலை இருந்தது. ஆனால் இன்று கல்லூரிகளில் இவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று சொன்னவர்கள் கலைஞரும், நம்முடைய தளபதியும்தான்.இங்கே பார்க்கும்போது எல்லோரும் படித்தவர்கள், பணியாற்றுபவர்கள், சொந்தத் தொழில் செய்பவர்கள் என்று சொன்னால், அதுதான் திராவிட மாடல் ஆட்சியின் வளர்ச்சி. இந்தத் திருநங்கைகள் இன்னும் படித்து, முன்னேற வேண்டும்.
கல்வி நிலையங்களில் மட்டுமல்ல, சுயதொழில், அரசு வேலைகள், எல்லாத் துறைகளிலும் அவர்கள் வளர வேண்டும். இது எதுவும் அரசியலுக்காக நான் பேசவில்லை. நாம் அனைவரும் சமம். All are equals என்ற உணர்வு உருவாக வேண்டும். யாரையும் தாழ்ந்தவர்களாக நினைக்கக் கூடாது என்ற உணர்வோடு நாம் செயல்பட வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் நோக்கமும் கொள்கையும்.அந்த அடிப்படையில் வந்திருக்கும் அனைத்து திருநங்கைகளுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனவும் தெரிவித்தார்.
