தென்காசி பேருந்து விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!

தென்காசி அருகே பேருந்து விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Featured image

தென்காசி :மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் பகுதியில் இன்று  (நவம்பர் 24, 2025)  திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களில் 2 சிறுவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள் அடங்குவர். இதுவரை 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. விபத்து நடந்த உடனேயே அப்பகுதி மக்களும், போக்குவரத்து போலீசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம், சிறு காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளது.விபத்தில் காயமடைந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்க 25-க்கும் அதிகமான 108 ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்தன. காயமடைந்தவர்கள் தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விபத்து குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்துள்ளார். விபத்துக்கான முக்கிய காரணம் அதிவேகம் மற்றும் ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலி சென்ற பேருந்தும் (எம்.ஆர். கோபாலன்), எதிர்த்திசையில் திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டை சென்ற பேருந்தும் (கே.எஸ்.ஆர்.) நெடுஞ்சாலையின் நடுவரைப் பகுதியில் மோதியுள்ளன.

இரு பேருந்துகளும் பயணிகளால் நிரம்பியிருந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., அமைச்சர்கள் உட்பட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.