மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள், தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்- ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

அவசரமான தொகுதி மறுவரையறை குறித்து - ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Hero Image

சென்னை : தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பாக ஒன்றிய பாஜக அரசு மேற்கொள்ளும் அவசர நடவடிக்கைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.இன்று வெளியிட்ட வீடியோ செய்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:“வணக்கம். தமிழ்நாட்டின் வாசல் வரை வந்துட்ட பேராபத்தைப் பற்றிச் சொல்லவும், ஒன்றிய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவும் தான் இந்த வீடியோ. தேர்தல் பிரச்சாரத்துக்காக நிக்காம ஓடிக்கிட்டே இருந்தாலும் இந்தக் கடமையைத் தவிர்க்க முடியாது.நாளை மறுநாள் ஏப்ரல் 16 அன்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுகிறது.

கூடுதுன்னு சொல்றதை விட, தமிழ்நாடு-மேற்கு வங்கம் தேர்தலுக்கு நடுவில் வலுக்கட்டாயமாகக் கூட்டப்படுதுன்னுதான் சொல்லணும். Delimitation-என்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியல் சட்டத் திருத்தத்தை இந்தத் தொடரில் bulldoze பண்ணப் போறாங்க.முதல்ல இருந்தே இது பற்றி நாம் தொடர்ந்து எச்சரித்தோம்.

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுக்க பாதிக்கப்பட உள்ள மாநில முதலமைச்சர்களையும், முக்கிய கட்சித் தலைவர்களையும் சென்னைக்கு அழைத்து கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடத்தினோம்.மக்கள் தொகையை கட்டுப்படுத்துங்கள், அளவோடு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள், குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடியுங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னதையெல்லாம் நாங்கள் கேட்டோம்.

சொன்னதை ஒழுங்காகச் செய்ததற்காகவே எங்களுக்குத் தண்டனை தருவீங்களா?தென் மாநிலங்கள் பாதிக்கப்படாது என்று நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் அவர்கள் முத்திரை வாதம் தரணும் என்று கேட்டோம். பதில் இல்லை. இதற்காகப் பல்வேறு கட்சி எம்.பி.க்கள் பிரதமரை நேரில் சந்தித்து முறையிட நேரம் கேட்டோம்.

அதுவும் கிடைக்கவில்லை.இப்படி நாம் சொன்ன எதையும் அவர்கள் காதில் வாங்காமல், திமுக மட்டுமல்ல, எந்தக் கட்சியோடும், எந்த மாநிலத்தோடும் எந்த ஆலோசனையும் நடத்தாமல், தங்கள் இஷ்டத்துக்கு பண்ணப் பார்க்கிறார்கள்.நேற்று மரியாதைக்குரிய அம்மையார் சோனியா காந்தி அவர்களும் நாம் கேட்கும் அதே கேள்விகளை கேட்டிருக்கிறார்கள். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட யாருக்குமே பதில் இல்லை.

இப்படி அவசர அவசரமாக Delimitation பண்ண நினைப்பது பாஜக அரசின் அப்பட்டமான ஜனநாயக விரோத செயல். இன்னும் சொன்னால், மாநில உரிமைகளைப் படுகொலை செய்த செயல்.இந்த Delimitation எப்படி பண்ணப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. அந்தச் சட்டத் திருத்தம் என்ன என்பது பற்றி இதுவரை எந்த விளக்கத்தையும் கொடுக்காமல் இருக்கிறார்கள். இவ்வளவு மறைத்து மறைத்துப் பண்ணுகிறார்கள் என்றால், கண்டிப்பாக ஏதோ பெரிய ஆபத்து இருக்கிறது என்ற சந்தேகம் எல்லோருக்கும் வலுவடைகிறது.தென் மாநில மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.நான் ஒன்றிய பாஜக அரசுக்கும், மான்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கும் இந்த நேரத்தில் முக்கியமாக ஒன்று சொல்லிக்கிறேன்.நடக்க இருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எங்கள் எம்.பி.க்கள் கலந்து கொள்வார்கள்.

தமிழ்நாட்டைப் பாதிக்கிற மாதிரியோ, வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை மேலும் வாரி வழங்குகிற மாதிரியோ ஏதாவது நடந்தால், தமிழ்நாட்டில் இருக்கும் நாங்கள் எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்.தமிழ்நாடு ஸ்தம்பிக்கும். தமிழ்நாடு தனது எதிர்ப்பை கடுமையாகக் காட்டும். ஒவ்வொரு குடும்பமும் தெருவில் வந்து உட்காரும். தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கும் என்னுடைய தலைமையிலேயே மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம்.இது தேர்தல் காலம்தான். இவர்கள் கவனம் அதில் தான் இருக்கும்.

நாம் டெல்லியில் silent-ஆக தமிழ்நாட்டின் தொகுதி மறுவரையறை பண்ணிவிடலாம் என்று மட்டும் நினைக்கவே நினைக்காதீர்கள். சொல்கிறேன் நான். தமிழ்நாடு முதலமைச்சர் மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பேரியக்கத்தின் தலைவர். நீங்கள் இதுவரை பார்க்காத தமிழ்நாட்டைப் பார்க்க வேண்டியிருக்கும். ஐம்பதுகள், அறுபதுகளில் பார்த்த பழைய திமுகவை இந்தியா திரும்பவும் பார்க்க வேண்டியிருக்கும்.

இவன் என்ன மிரட்டுகிறான் என்று நினைக்காதீர்கள். நான் உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் அதை மிரட்டல் என்று நினைத்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை.ஆம், தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்படும் எச்சரிக்கை இது. தேர்தல், ஆட்சி அதிகாரம் இதெல்லாம் எங்களுக்கு இரண்டாம் பட்சம்தான். நாங்கள் சுயமரியாதைக்காரர்கள். எங்களுக்குக் கொள்கைதான் முக்கியம்.

மாநில உரிமைகள்தான் முக்கியம். அதுதான் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழர் கலைஞரும் எங்களுக்குக் கொடுத்துப் போன உயிர்க் கொள்கை.தமிழ்நாட்டுக்கு தவறு இழைத்துவிட்டு வழக்கம் போலச் சும்மா கடந்து போவோம் என்று நினைத்தால் நடக்காது.சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவர் மீது ஆணையாகச் சொல்கிறேன். தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் இந்தியாவே திரும்பிப் பார்க்க வைத்துவிடுவோம்.மான்புமிகு பிரதமர் மோடி அவர்களை மீண்டும் சொல்கிறேன். இது தமிழ்நாட்டிலிருந்து உங்களை நோக்கி விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை.

மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள், தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்- ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!