"ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்" – தவெக தலைவர் விஜய்.!

அனைத்து சமூக மக்களையும் சமமாக பாவித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு சமத்துவ சமுதாயம் படைக்க பாடுபடுபவர்கள் ஆசிரியர்கள் என்று தவெக தலைவர் விஜய் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்

tvk vijay

சென்னை :ஆசிரியர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்ததோடு, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், ஊதிய முரண்பாடுகளை களைதல், பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் பத்து அம்ச கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து, திமுக அரசு இதில் பொய் வாக்குறுதிகளால் ஊழியர்களை ஏமாற்றுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில், ”அறிவு தீபம் ஏற்றி, அறியாமை இருளை நீக்குபவர்கள், அனைத்துக் குழந்தைகளுமே வெல்ல வேண்டும் என நினைப்பவர்கள். அனைத்துச் சமுதாய மக்களையும் சமமாக பாவித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு சமத்துவ சமுதாயம் படைக்கப் பாடுபடுபவர்கள்.

இவர்கள்தாம் கல்விக் கண் திறந்த எம் கொள்கைத் தலைவர் காமராசர் அவர்களின் கனவுகளை மெய்ப்பித்து வருபவர்கள். ஆம், இவர்கள்தாம் நம் ஆசிரியப் பெருமக்கள். இவர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை இந்த ஆசிரியர் தினத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏற்றமிகு தலைமுறையை உருவாக்கி வரும் நம் ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை, கொடுத்த வாக்குறுதியின்படி நிறைவேற்றி, அவர்கள் வாழ்விலும் ஏற்றம் காண வழிவகை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node