டெல்லியில் தமிழர்கள் வசித்த மதராஸி முகாம் இடிப்பு.., தமிழ்நாடு அரசு உதவி அறிவிப்பு.!

மதராஸி கேம்ப் மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

tn govt - Delhi

சென்னை :டெல்லியில் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்த மதராஸி முகாம் இடிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக தமிழர்கள் வசித்து வரும் அந்த குடியிருப்புகளை இடித்து மக்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒக்கலா, கௌதம் புரி, இந்திரபுரி, ஜல் விஹார், ஜங்புரா உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் இடத்தை அரசு அகற்றுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்னர்.

தற்பொழுது, கால்வாயை ஒட்டியுள்ள குடிசை பகுதிகளை அகற்றும் பணியில் ஒரு பகுதியாக இடிக்கப்பட்டு வருகிறது. முகாம் பகுதியில் வசித்த 370 குடும்பங்களில் 189 குடும்பங்களுக்கு மட்டுமே மாற்று இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இதனால், அரசின் நடவடிக்கையால் மதராஸி முகாம் தமிழ்க் குடும்பங்கள் நிற்கதியாக நிற்கிறது. இந்த நிலையில், டெல்லியில் வீடுகளை இழந்த தமிழர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசி அறிவித்துள்து.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” தமிழ்நாட்டின் முதலமைச்சரின் உத்தரவின்படி, புது டெல்லி உள்ள “தமிழ்நாடு இல்ல” அலுவலகம், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதிலும் கண்காணிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. மாநிலத்துக்கு வெளியே வசிக்கும் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, “மதராசி கேம்ப்” குடியிருப்பாளர்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும் என்பதை உறுதி செய்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிநடத்தலின் கீழ், “மதராசி கேம்ப் குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவிக் கரம் நீட்டும். வாழ்வாதாரம் மற்றும் தேவையான பிற அடிப்படை உதவிகளும் வழங்கப்படும். இந்த உதவிகள். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் அலுவலகம் மூலம் சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.