நெல்லை :மாவட்டத்தில் ஆகஸ்ட் 22, 2025 அன்று நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மாநாட்டில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்து, “2026 தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்” என்று ஆவேசமாக பேசினார். முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஒரே நோக்கம் தனது மகன் உதயநிதியை முதல்வராக்குவது என்றும், “ஒருநாளும் உதயநிதி முதல்வராக முடியாது” என்றும் கூறினார். மேலும், செந்தில் பாலாஜி, பொன்முடி போன்றோர் சிறையில் இருந்தவர்கள் ஆட்சியில் இருப்பதையும், 130-வது அரசியல் சட்டத் திருத்த மசோதாவை திமுக எதிர்ப்பதையும் கடுமையாக விமர்சித்தார்.
அமித் ஷாவின் இந்த கருத்துகளுக்கு, திமுக அமைச்சர் கே.என். நேரு கடுமையான பதிலடி கொடுத்தார். “அமித் ஷா நினைப்பது போல் திமுகவை தோற்கடிக்க முடியாது. கடந்த 15 ஆண்டுகளாக பாஜக தொடர்ந்து போராடி வருகிறது, ஆனால் திமுகவே தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. வருங்காலமும் திமுகவுக்கு வெற்றி முகமாகவே இருக்கும்,” என்று திட்டவட்டமாக கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் முதல்வராக முடியாது என்ற அமித் ஷாவின் கருத்துக்கு, “அவர்கள் தங்கள் ஆசையை சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் வென்று காண்பிப்போம்,” என்று நேரு பதிலளித்தார். மேலும், “அதிமுக-பாஜக கூட்டணியை அதிமுக தொண்டர்களும், பாஜகவினரும் கூட ஏற்கவில்லை. யார் எந்த புனைப்பெயர் வைத்து அழைத்தாலும், மு.க. ஸ்டாலினே முதலமைச்சராக இருப்பார்,” என்று வலியுறுத்தினார்.
மேலும், பெண்களின் ஆதரவு குறித்து பேசிய நேரு, “எம்ஜிஆருக்கு பிறகு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தான் பெண்களின் ஆதரவு அதிகம் உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு,” என்றார். “திமுகவுக்கு போட்டி அதிமுகவா, தவெகவா?” என்ற கேள்விக்கு, “திமுகவுக்கு எந்தப் போட்டியும் இல்லை,” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
