சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சந்தித்த கடுமையான தோல்விக்குப் பிறகு, முதல் முறையாக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகை தந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு, கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்.
இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பே, அதிமுகவில் உள்கட்சி அரசியல் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு தரப்பினர், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் எதிர்கால திசையை தீர்மானிக்கும் முக்கிய கூட்டமாக பார்க்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் இருந்து 80க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டதாக முன்னாள் அமைச்சர் ரமணா தெரிவித்துள்ளார். கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது. பொதுக்குழுவை கூட்டுவது குறித்து இந்தக் கூட்டத்தில் எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை” என்று விளக்கம் அளித்தார்.
கூட்டத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “பதவிக்காக சிலர் கட்சிக்கு துரோகம் செய்து விட்டு சென்றுள்ளனர். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது அரசியலில் சகஜமான ஒன்று. இப்போது கட்சி மிகவும் இக்கட்டான சூழலில் இருக்கிறது. இதுபோன்ற நேரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், அடிமட்ட தொண்டர்கள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஆதரித்து வருவதாகவும் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக தனபால், “80 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். அடிமட்டத் தொண்டர்கள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை அனைவரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தின் மூலம், கட்சிக்குள் எழுந்துள்ள அதிருப்திகளை சமாளித்து, மீண்டும் அதிமுகவை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
