சிவகங்கை :மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி-காங்கேயம் சாலையில் நேற்று நடந்த பயங்கர விபத்தில் இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி நொறுங்கின. காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற பேருந்தும் அதிவேகத்தில் வந்ததால் குறுகலான வளைவுச் சாலையில் ஒரு பேருந்து எதிரே வந்ததும் ஓரமாக இறங்க முயன்றது. ஆனால் எதிர்திசை பேருந்து ஸ்டீயரிங் கட்டுப்பாட்டை இழந்து நேரடியாக மோதியதால் இரு பேருந்துகளின் முன்பகுதியும் முற்றிலும் நசுங்கின.
மோதிய வேகத்தில் பயணிகள் இருக்கையோடு தூக்கி வீசப்பட்டனர், பலர் இரும்புக் கம்பிகளில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் இதுவரை 11 பேர் (9 பெண்கள், 2 ஆண்கள்) உயிரிழந்துள்ளனர், 45-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மதுரை ராஜாஜி, சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்ததை தொடர்ந்து நடத்துனர் கலைச்செல்வன் வேதனையுடன் பேசினார் விபத்து நடந்த காங்கேயம்-காரைக்குடி பேருந்தின் நடத்துனர் கலைச்செல்வன் (38) திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் படுக்கையில் இருந்தபடியே கண்ணீர் மல்க பேசினார். “நாங்கள் எங்கள் பாதையில் சரியாகத்தான் வந்தோம். பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். திடீரென எதிர்திசையில் ஒரு பேருந்து ரொம்ப வேகமாக வந்தது. எங்கள் ஓட்டுநர் சென்ராயன் சார் அதைப் பார்த்ததும் உடனே பிரேக் அழுத்தி ஓரமாக இறங்கி ஓட்டினார். ஆனாலும் அந்தப் பேருந்து ஏறி வந்து நேருக்கு நேர் மோதிவிட்டது.
சென்ராயன் சார் ஸ்டீயரிங்கில் சிக்கிக் கொண்டார். நான் கத்திக் கத்தி அவரை இழுத்தேன்… அவர் கண் முன்னாலேயே உயிரை விட்டுவிட்டார். எனக்கு இடது கை எலும்பு முறிந்து போய்விட்டது. பல பெண்கள் இருக்கையோடு வெளியே தூக்கி வீசப்பட்டார்கள், அலறல் சத்தம் மட்டுமே காதில் விழுந்தது” என்று வேதனையுடன் கூறினார்.
மீட்புப் பணிகளும் இழப்பீடும் விபத்து தகவல் பரவியதும் 18-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள், கிரேன்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சிக்கியவர்களை இரும்புக் கம்பிகளை வெட்டி மீட்டனர். உயிரிழந்த 11 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சமும், பிரதமர் நரேந்திர மோடி தலா ரூ.2 லட்சமும் இழப்பீடு அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
