பாஜகவின் ஸ்லீப்பர் செல்தான் செங்கோட்டையன் – அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

பாஜகவின் ஸ்லீப்பர் செல்தான் செங்கோட்டையன் என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்.

ragupathy tvk sengottaiyan

சென்னை :தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக அமைந்தது, அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது. நேற்று (நவம்பர் 27) சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் செங்கோட்டையனும் அவரது நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் கட்சியில் சேர்ந்தனர்.

இணைந்த உடனேயே அவருக்கு நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டன. 50 ஆண்டுகளுக்கும் மேல் அதிமுகவில் பயணித்த செங்கோட்டையனின் இந்த நகர்வு, தவெகவின் கொங்கு மண்டல செல்வாக்கை வலுப்படுத்தும் என அரசியல் கணிப்பாளர்கள் கூறுகின்றனர்.செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தீவிரமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி மதுரையில் செய்தியாளர்களிடம் “அவர் அதிமுகவில் இல்லை, அதற்கு பதில் சொல்ல அவசியமில்லை” என்று கோபமாகக் கூறி பேட்டியை முடித்தார். முன்னதாக “அவரிடமே கேளுங்கள்” எனவும் தெரிவித்தார். அந்த வகையில், திமுக அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் செங்கோட்டையனை “பாஜகவின் ஸ்லீப்பர் செல்” என்று கடுமையாக விமர்சித்தார்.

“பாஜகவோடு செங்கோட்டையனுக்கு நல்ல புரிதல் உள்ளது. எந்தப் பொறுத்திலும் இல்லாமல் அமித்ஷாவை சந்தித்தவர் அவர். அமித்ஷாவின் கண்ட்ரோலில் இன்றும் இயங்கி கொண்டிருக்கிறார். பாஜகவின் வேலைகளை நிறைவேற்றத் தான் தவெகவில் இணைந்துள்ளார். அவர் எதற்காக அனுப்பப்பட்டுள்ளார் என்பது பின்னர்தான் தெரியும்” என்று தெரிவித்தார்.

இந்த விமர்சனம், தவெக-பாஜக இடையே ரகசிய திட்டங்கள் உள்ளதாக யூகிக்க வைத்துள்ளது.ரகுபதியின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. செங்கோட்டையன் திமுகவுக்கு வரவில்லை என்று கூறிய அவர், “ஸ்லீப்பர் செல்” எனும் வார்த்தையால் பாஜகவின் உள்நோக்கங்களை வெளிப்படுத்த முயன்றார்.