சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்.!

Customs officials seized Rs 5 crore worth of cannabis and narcotics smuggled from Chennai to Qatar.

சென்னையில் இருந்து கத்தாருக்கு கடத்த சென்ற ரூ.5 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஏர் கார்கோ சரக்கு முனையத்தில் இருந்து கத்தார் நாட்டு செல்லும் சரக்கு விமானத்தில் பெரும் அளவில் போதை மருந்துகள் கடத்தப்படுவதாக சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, கத்தார் செல்லும் சரக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது, பார்சல்களில் டிஜிட்டல் எடை எந்திரங்கள் இருப்பதாக தெரிந்தது. பின்னர் அந்த பார்சலை பிரித்து சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த எடை எந்திரங்களில் ரூ.4 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள 44 கிலோ எடைக் கொண்ட கஞ்சாவை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், ரூ.70 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 620 கிராம் ‘பிரிகேப்லின்’ என்ற போதை மாத்திரைகள், 700 கிராம் போதை பவுடர் ஆகியவற்றையும் கைப்பற்றினர். இதையடுத்து, நடத்திய விசாரணையில் பார்சலை கத்தாருக்கு அனுப்பிய ஏற்றுமதி நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகி மற்றும் ஏஜெண்டு ஆகியோரை கைது செய்தனர்.

போதைப்பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 7 பார்சல்களில் 54 டிஜிட்டல் எடை எந்திரங்கள் இருந்தாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.