“ஜோதிமணிக்கு மரியாதை கொடுங்கள்”- காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.!

கூட்டணியில் இருக்கும்போது செந்தில் பாலாஜி இப்படி செய்திருக்கக்கூடாது எனவும் ஜோதிமணிக்கு மரியாதை கொடுங்கள் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறிருக்கிறார்.

Congress - SELVAPERUNTHAGAI

சென்னை :நேற்றைய தினம், முதல்வர் ஸ்டாலினின் தலைமையே தேவை என்று உணர்ந்து கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் கவிதா திமுகவில் இணைந்ததாக செந்தில் பாலாஜி ட்வீட் செய்திருந்தார். இதற்கு, மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான ஜோதிமணி, திமுக கரூர் மாவட்டச் செயலாளர் செந்தில் பாலாஜியின் சமூக ஊடக பதிவு குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார்.

ஜோதிமணி தனது பதிவில், ”அர்ஜென்டினாவில் அரசியல் மாநாட்டில் பங்கேற்க நேர்ந்ததால் உடனடியாக பதிலளிக்க முடியவில்லை என்றும், இதுபோன்ற அவமரியாதையை ஏற்க மாட்டோம்” எனவும் கூறினார். மேலும், செந்தில் பாலாஜியின் பதிவு, காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதையை பாதித்ததாகவும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், இந்த விவகாரத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்வார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, ”கூட்டணியில் இருக்கும்போது செந்தில் பாலாஜி இப்படி செய்திருக்கக்கூடாது.

நானும் அதனை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். பின்னர் அந்த ட்வீட் நீக்கப்பட்டது. இப்படி செய்வதால் முதலமைச்சருக்குத்தான் நெருக்கடி கொடுக்கிறார்கள். அதனை தவிர்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள்.

எம்.பி ஜோதிமணி மிகவும் பெருந்தன்மை வாய்ந்தவர். பெருந்தன்மையோடுதான் இந்த விஷயத்தை அணுகியிருக்கிறார். கூட்டணி தர்மம் என்பது வேறு. இருந்தாலும் எம்.பி.க்கான மரியாதையைம், மதிப்பையும் ஜோதிமணிக்கு அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.