சென்னை :சென்னையில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க தமிழிசை சௌந்தரராஜன் களத்தில் இறங்கினார். ஆனால், அவர் போராட்டக் களத்தை அடைவதற்கு முன்பு காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தூய்மைப் பணியாளர்கள், சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிராகவும், பணி நிரந்தரம் கோரியும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெ. சண்முகம், மற்றும் அதிமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். போராட்டக்காரர்கள், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் தனியார்மயமாக்கலை ரத்து செய்யக் கோரி, சென்னை மாநகராட்சி முன்பு இரவு பகலாக தங்கி போராடி வருகின்றனர்.
இருப்பினும், அரசு சார்பில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, மற்றும் ஆணையர் குமரகுருபரன் ஆகியோருடன் நடந்த ஏழு கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவை மீறியதால் தமிழிசை மீது பெரியமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
