பாமக பொதுக்குழு கூட்டம் : அன்புமணி அழைப்பு கொடுத்தும் வராத ராமதாஸ்!

அன்புமணி தலைமையில் நடக்கும் பொதுக்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

PMK meeting

மாமல்லபுரம் :பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆகஸ்ட் 9, 2025 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் பொதுக்குழு கூட்டத்தில், கட்சி நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸுக்கு மரியாதை அளிக்கும் வகையில் தனியாக நாற்காலி ஒதுக்கப்பட்டது. இருப்பினும், ராமதாஸ் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காததால், அந்த நாற்காலி காலியாக உள்ளது.

அன்புமணி, கட்சியின் நிறுவனராக ராமதாஸை மதித்து, அவரை பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள அன்புடன் அழைப்பு விடுத்திருந்தார். கூட்டத்திற்கான பேனர்களில் ராமதாஸின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது, இது கட்சியின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்பட்டது. ஆனால், ராமதாஸ் இந்த அழைப்பை ஏற்கவில்லை, மேலும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

மேலும், இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு, ராமதாஸ் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஆகஸ்ட் 8, 2025 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்ததால், அன்புமணி தலைமையில் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தல் உத்திகள் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

ராமதாஸுக்கு ஒதுக்கப்பட்ட காலி நாற்காலி, பாமக-வின் உட்கட்சி பிளவை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையேயான தலைமைப் பதவி தொடர்பான மோதல், கட்சியின் ஒற்றுமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. கருத்து வேறுபாடுகளை மறந்து அன்புமணி பொதுக்குழு கூட்டத்திற்கு ராமதாஸை அழைத்த நிலையில், ராமதாஸ் வருவார் நிலைமை சரியாகும் என பாமக தொண்டர்கள் மகிழ்ச்சியில் இருந்த நிலையில், அவர் வராதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.