தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவர் விஜய், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.காரைக்குடியில் தவெக வேட்பாளர் பிரபு அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த விஜய், பிரச்சார வாகனத்திலிருந்து இறங்கி திடீரென சைக்கிள் ஓட்டினார். அப்போது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டதால், அவர் சிறிது நேரம் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார்.
பாதுகாப்பு கருதி உடனடியாக சைக்கிள் பயணத்தைக் கைவிட்டு மீண்டும் வாகனத்தில் ஏறிக்கொண்டார். இந்த நிலையில், பாஜக தமிழக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய்யின் பிரச்சாரத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,“ஜோசப் விஜய் சைக்கிளில் ஓட்டி வந்தார், அதுக்கப்புறம் கைக்காட்டிட்டே ஓடிட்டே ஆடிட்டு வந்தார் என்று செய்தியாளர் சொன்னாரு. எல்லாரும் எம்.ஜி.ஆர் ஆகிட முடியாது. எல்லாரும் புரட்சித் தலைவர் அம்மா ஆகிட முடியாது. அதற்காகத் தனி கொள்கைகள் வேணும், அமைப்பு வேணும், இயற்கையான உணர்வுகள் வேணும்.ஏதோ திமுகவை ஆட்சியில் அமைப்பதற்காக ஜோசப் விஜய் தனியா கட்சி ஆரம்பிச்சிருக்காரு. என்னைப் பொறுத்தமட்டிலும் அவர் ஒரு நல்ல குடும்பஸ்தனாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கணவனாக இருக்க வேண்டும்.
ஒரு மக்களுக்காக உதவக்கூடிய சேவனராக இருக்க வேண்டும். ஏதோ ஆட்சிக்கு வரணும் அப்படிங்கறதுக்காக இல்லாம.திமுகவை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக ஜோசப் விஜய் வந்திருக்கிறார். நேற்று காரைக்குடி சம்பவம் மிகவும் வேடிக்கையாக இருந்தது. மக்களுக்கு ஓட்டு வேணும்னா சைக்கிள் ஓட்டுறதுக்காக வந்துருக்கோம். திமுகவை ஓட்டணும். அதுக்காக வரலாம். சைக்கிள் ஓட்டுறதுக்காக வரக் கூடாது. இதெல்லாம் ஒரு கேலிக்குத்தான் விஷயமாக இருக்கு.
ஆனால் தமிழக மக்கள் இதுவரையிலும் கன்னியாகுமரி இருந்து கும்மிடிப்பூண்டி வரையிலும் நான் நிறைய தேர்தல்களில் பார்த்திருக்கிறேன். எல்லாரும் ஒருமித்த கருத்தோடு யார் ஆட்சியில் வர வேண்டும், யார் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் வாக்களித்திருக்கிறார்கள்.
இனிமே திமுக ஆட்சிக்கு வராது. மக்கள் சக்தி இன்றைக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி பக்கம் இருக்கிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பக்கம் இருக்கிறது. அண்ணன் EPS அவர்களுடைய பக்கம் இருக்கிறது. எங்கள் தேசிய ஜனநாயகத் தோழர்கள் கூட்டணி கட்சியினருடைய தலைமை. கஞ்சா இல்லாத தமிழகம். பெண்கள் கண்ணீர் வடிக்காத தமிழகத்தை நமது தமிழக வாக்காளர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்” என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.
