சென்னை : முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த திமுக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன், இன்று நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார். வெளியே வந்த கையோடு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக அரசின் அடக்குமுறைகளைக் கடுமையாகச் சாடியதுடன், அடுத்த சில மாதங்களில் இந்த ஆட்சி மாற்றத்தை சந்திக்கும் என்றும் சவால் விடுத்துள்ளார்.
ஜாமீனில் வெளியே வந்தவுடன் பேசிய அவர், "எந்த காலத்திலும், எவருக்கும் அஞ்சப் போவதில்லை. தவெக-வில் சேருமாறு என்னைப் பலமுறை மிரட்டி நெருக்கடி கொடுக்கிறார்கள். ஆனால், என் வாழ்நாள் முழுவதும் திமுக-விலேயே உறுதியாக நீடிப்பேன். யாராலும் என்னைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது; என் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வைக்கலாம் என்று கனவு காண வேண்டாம்.
நேற்று வந்த தவெக-வின் குதிரை பேர அரசியலுக்கு நான் பயப்படப் போவதில்லை, எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ளத் தயார்!" என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். ஆளும் தவெக அரசின் மீது காட்டமான விமர்சனங்களை முன்வைத்த அவர், "மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் இந்த அரசு, இன்னும் 6 மாதங்களுக்கு மேல் ஆட்சியில் இருக்காது. இந்த ஆட்சி விரைவில் வீழும்" என்று தனது அதிரடியான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தாலும், நீதிமன்றம் அவருக்கு ஒரு முக்கிய நிபந்தனையை விதித்துள்ளது. அதன்படி, இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு ஆத்தூர் காவல் நிலையத்தில் அவர் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
