"எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது" – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!

விஜய்யின் பேச்சு, தேர்தல் யுக்தி என்றும், வாக்குகளை பெறுவதற்காக அண்ணா, MGR பெயர்களையும், படங்களையும் பயன்படுத்துவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

AIADMK -vijay

சென்னை :நேற்றைய தினம் மதுரை பாரபத்தியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில், தவெக தலைவர் விஜய் மறைந்த முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆர் (MGR) குறித்து உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.

இது தொடர்பாக விஜய் பேசுகையில், “நான் இந்த மண்ணுல காலெடுத்து வச்சவுடனே ஒரே ஒருத்தர பத்தி தான் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்துச்சு. சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, நமக்கு ரொம்ப புடிச்சது எம்.ஜி.ஆர் தான். அவரோட பழகுறதுக்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கல. ஆனா அவர மாதிரியே குணம் கொண்ட என்னுடைய அண்ணன், விஜயகாந்தோட பழகுறதுக்கு நிறையவே வாய்ப்பு கிடைச்சுது” என்றார்.

எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியின் நிலை தற்போது எப்படி உள்ளது? அதை வெளியே சொல்ல முடியாமல் அதிமுக தொண்டர்கள் தவித்து வருகிறார்கள் என்று அதிமுகவை நேரடியாக விமர்சித்தார் விஜய். மேலும், இந்த மாநாட்டில், எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணாவின் படங்களுடன் விஜய்யின் படம் இடம்பெற்ற கட்அவுட்டுகள் மற்றும் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது சில விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியது.

இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘இது ஒரு தேர்தல் யுக்தி என்றும், வாக்குகளை பெறுவதற்காக அண்ணா, MGR பெயர்களையும், படங்களையும் பயன்படுத்துவதாக விமர்சித்தார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், ”யாராலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகி விட முடியாது,தேர்தல் யுக்தியாகதான் விஜய் இப்படி செய்கிறார். அதிமுக வாக்குகள் ஒரு காலும் எங்கும் போகாது. எங்கள் தலைவர் எம்ஜிஆர் பெயர் சொல்லாமல், ஜெயலலிதா பெயர் சொல்லாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது” என்றார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்து, அதிமுகவின் தொண்டர்கள் மற்றும் வாக்கு வங்கியின் விசுவாசத்தை வலியுறுத்துவதாக உள்ளது.