"சின்னதா பிஸ்னஸ் செய்தாலும், அதை தமிழ்நாட்டிலும் தொடங்குங்க" – மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.!

தமிழ்நாட்டில் உரிமையோடு, நம்பிக்கையோடு முதலீடு செய்யுங்கள், முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Germany - MKStalin

ஜெர்மனி :ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் இன்று நடைபெற்ற ‘மாபெரும் தமிழ்க் கனவு – 2025’ நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, ஜெர்மனியில் வாழும் தமிழர்களையும், முதலீட்டாளர்களையும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.

இந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “நீங்கள், சிறியதாக பிசினஸ் செய்து கொண்டிருந்தாலும், உங்கள் தொழிலைத் தமிழ்நாட்டிலும் தொடங்க முயற்சி செய்யவேண்டும். பெரிய பெரிய நிறுவனங்களில் நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்றால், உங்கள் நிறுவனத்தில், நம்முடைய தமிழ்நாட்டில் நிறைந்திருக்கின்ற வாய்ப்புகளைப் பற்றி எடுத்துச் சொல்லி, நம்முடைய தமிழ்நாட்டில் Invest செய்ய Motivate செய்யுங்கள்.

உங்கள் சொந்த கிராமங்களை கவனித்துக் கொள்ளுங்கள். அங்கே படிக்கின்ற நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ஏழை – எளிய மாணவர்களுக்கு உங்களால் முடிந்த கல்வி உதவிகளை செய்யுங்கள். ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு குழந்தைகளுடன் வாருங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் நம்முடைய வரலாற்றை எடுத்துச் சொல்லுங்கள்” என்றார்.

இந்த நிகழ்ச்சி, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் நடைபெற்றது.