காந்தி நினைவு நாள் மரியாதை : ஆளுநரின் குற்றச்சாட்டும்.., அமைச்சரின் விளக்கமும்…
ஆளுநர் ரவி, காந்தி நினைவு நாள் விவகாரத்தை அரசியல் ஆக்குவதை தவிர்த்து, தமிழக மக்களிடையே ஒற்றுமை நல்லிணக்கத்தை வளர்க்க கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்."என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று (ஜனவரி 30) மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் மகாத்மா காந்தி சிலை/புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி வந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னை எழும்பூரில் உள்ள காந்தி சிலைக்கு கிழே உள்ள புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனை குறிப்பிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சென்னை கிண்டி பூங்காவில் உள்ள காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்திக்கு அவர்கள் மரியாதை செய்யவில்லை என தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சமூக வலைதள பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
ஆளுநர் மாளிகை பதிவு :
அதில், “காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள ஒரு பரந்த நிலத்தில் 1956-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச்சின்னமாகும். காந்தி நினைவு நிகழ்வுகளை – அவரது பிறந்தநாள் மற்றும் உயிர்த்தியாக தினத்தை – நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா?
தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும் முதலமைச்சரிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள் பிடிவாதமான மறுக்கப்பட்டன. மகாத்மா காந்தி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். அதனால், இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?” என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் கண்டனம் :
அதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” மகாத்மா காந்தி நினைவு நாளில் முதலமைச்சர் மரியாதை செலுத்தியது குறித்து கருத்து தெரிவித்த ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். பாரம்பரியமாக மகாத்மா காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் தியாகிகள் தினம் அனுசரிப்புகள் ஆகியவை மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் மட்டுமே நடைபெற்று வருகின்றன. அங்கு தற்போது மெட்ரோ பணிகள் நடைபெறுவதால், 2022-ம் ஆண்டு முதல் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி சிலை நிறுவியது. அன்று முதல் மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் தியாகிகள் தினம் அங்கு தான் அனுசரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆளுநர் ரவி கடந்த ஆண்டுகளில் எழும்பூரில் நடந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
மகாத்மா காந்தி நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார். அருங்காட்சியகத்தின் பிரதான நுழைவாயில் முன்பு இருக்கும் காந்தி சிலை முன்புதான் அஞ்சலி நிகழ்வு நடந்திருக்கிறது. ஆளுநர் குறிப்பிட்டது போல, ஒரு மூலையில் நிகழ்வு நடக்கவில்லை. அது முதலமைச்சர் அஞ்சலி செலுத்திய புகைப்படத்தை பார்த்தாலே தெரியும். ஆளுநர் கண்களுக்கு அவதூறு தான் தெரியும்.
தேசப்பிதாவை கொன்றவர்கள்..,
1947 ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் கிடைத்த போது திராவிட கழக பொதுச்செயலாளராக இருந்த அண்ணா, “சுதந்திர நாள் இன்ப நாள்” என கூறினார். அண்ணாவின் வழிவந்த நாங்கள் தேசத்தையும், தேச பிதாவையும் நேசிப்பவர்கள். தேசப்பிதாவை கொன்றவர்களை கொண்டாடுகிறவர்கள் அல்ல நாங்கள்.
காந்தியை யார் கொன்றது, ஏன் கொல்லப்பட்டார் என்பது எல்லாம் ஆளுநருக்கு தெரியும். இன்று தேசப்பிதா மறைந்த தினம் மட்டுமல்ல, ஒரு இந்துத்துவா தீவிரவாதியால் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினம். மதவாதிகளை எதிர்த்து திராவிட இயக்கம் தான் தொடர்ந்து களமாடி வருகிறது.
காந்தி திரைப்படம் :
2024 நாடளுமன்ற தேர்தல் சமயத்தில், பிரதமர் மோடி, மகாத்மா காந்தியை பலரும் ‘காந்தி’ என்ற படத்தின் மூலம் தான் தெரிய வந்தது என சிறுமைப்படுத்திய போது ஆளுநர் எங்கு போனார்? 2019-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் இந்து மகாசபை அலுவலகத்தில் காந்தின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டு தீ வைத்த பூஜா சகுன் பாண்டேவை ஆளுநர் கண்டித்தாரா?
காந்தி நினைவு நாள் விவகாரத்தை அரசியல் ஆக்குவதை தவிர்த்து, தமிழக மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.”என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.