பெண்களுக்கு அறிவுதான் உண்மையான அழகு...முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பீச்!

நீங்கள் எல்லோரும் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேறுவதே எனக்கு செலுத்தக்கூடிய உண்மையான நன்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Featured image

சென்னை :வேள்சர் கிறிஸ்தவக் கல்லூரியில் (WCC) நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களின் கல்வி மற்றும் முன்னேற்றம் குறித்து உருக்கமாகப் பேசினார். “பெண்கள் என்றாலே அழகுதான். அப்படிப்பட்ட பெண்களுக்கு அறிவுதான் உண்மையான அழகு. படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உலகிலேயே அழகான அணிகலன்” என்று கூறிய அவர், படிப்பின் மூலமே பெண்கள் தங்களை வலிமையாக்கிக் கொள்ள முடியும் என வலியுறுத்தினார்.

விழாவில் பல மாணவிகளின் சாதனைகளைப் பாராட்டிய அவர், அவர்களின் முயற்சியே உண்மையான வெற்றிக்கு அடித்தளம் என்றார்.முதலமைச்சர் ஸ்டாலின், திமுக அரசின் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் தாக்கத்தை சுட்டிக்காட்டினார். “புதுமைப் பெண் திட்டத்தால் மட்டும் பெண்கள் உயர்கல்வியில் சேர்வது கூடுதலாக 34% உயர்ந்திருக்கிறது. இதைவிட மகிழ்ச்சி எனக்கு வேறு என்ன வேண்டும்?” என்று கேட்ட அவர், இந்தத் திட்டம் பெண்களின் கல்வி வாய்ப்புகளை பெரிதும் மாற்றியுள்ளதாகவும், பல குடும்பங்களின் தலையெழுத்தை மாற்றியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு பல குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.“வெற்றிக்கு Short Cut கிடையாது. Hard Work பண்ணாதான் ஜெயிக்க முடியும்” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகழ்பெற்ற டயலாக்கை மேற்கோள் காட்டிய முதலமைச்சர், “கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்கிறது நிலைக்காது” என்று மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். கல்வியில் கடின உழைப்பு மட்டுமே நிலையான வெற்றியைத் தரும் என்றும், அதற்கு அர்ப்பணிப்பு தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழாவில் கலந்துகொண்ட மாணவிகளிடம் உணர்ச்சிபூர்வமாகப் பேசினார். “இதுபோன்ற நன்றி தெரிவிக்கும் விழாக்களைவிட, நீங்கள் எல்லோரும் நன்றாகப் படித்து வாழ்க்கையில் முன்னேறுவதே எனக்கு செலுத்தக்கூடிய உண்மையான நன்றி” என்று கூறினார். மாணவிகளின் கல்வி முன்னேற்றமே தனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி என்றும், அவர்களின் வெற்றியே தனது உழைப்பிற்கு கிடைத்த உண்மையான பலன் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாக, சென்னை WCC கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழா முதலமைச்சர் ஸ்டாலினின் பேச்சால் உணர்ச்சி மயமானதாக அமைந்தது. புதுமைப் பெண் திட்டத்தின் வெற்றி, பெண்களின் கல்வி முன்னேற்றம், கடின உழைப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றை அவர் வலியுறுத்தியது மாணவிகளுக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது. திமுக அரசின் கடந்த 5 ஆண்டு சாதனைகளை நினைவூட்டிய இந்த உரை, பெண்களின் கல்வி மற்றும் வலிமைக்கு அரசு அளித்து வரும் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது.