சென்னை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, காவிரி மற்றும் மேகதாது விவகாரங்களில் தவெக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி, "தவெக அரசு அமைந்த பிறகு, மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு இதுவரை இல்லாத அளவுக்கு அதிவேகமாகச் செயல்பட்டு வருகிறது. காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து நிற்கின்றன; ஆனால், இங்கே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டக் கூட தமிழ்நாடு அரசு மறுக்கிறது" என்று குற்றம்சாட்டினார். மேலும், விவசாயிகளுக்கு முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது அரைகுறையாகத் தள்ளுபடி செய்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சர் விஜய் விளக்கம்
எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், காவிரி விவகாரத்தில் அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். "காவிரி விவகாரத்தில் துளியும் அரசியல் செய்யும் எண்ணம் எங்களிடம் கிடையாது. மேகதாது அணை விவகாரம் குறித்து நாம் அனைவரும் இணைந்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதனைத் தொடர்ந்து அதைக் கடிதமாகப் பிரதமருக்கும் அனுப்பியுள்ளோம். காவிரியில் நமது உரிமையை இந்த அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது" என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், பக்கத்து மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்துக் கூறுகையில், "காவிரிப் பிரச்னையில் பேசித் தீர்வு காணப் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனத் கோரிக்கை வைத்தது நான்தான். இந்தப் பிரச்னைக்கு ஒருவேளை தீர்வு கிடைக்காதா என்ற நல்லெண்ணத்தில்தான் அந்த முயற்சி எடுக்கப்பட்டது.
ஒருவேளை இந்தப் பேச்சுவார்த்தையால் எனக்கு ஏதேனும் அவமானம் ஏற்பட்டாலும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அதையும் தாங்கிக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். பகைநாடுகூட பேசித் தீர்க்கும்போது, பக்கத்து மாநிலத்துடன் பேசிப் பார்க்கலாம் என்றுதான் கர்நாடகா செல்ல நான் முடிவெடுத்தேன்" என்று உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டார்.
